சேதமடைந்த வனத்துறை கட்டிடம் சீரமைக்கப்படுமா?
தடியன்குடிசையில் சேதமடைந்த வனத்துறை கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
26 ஏக்கர் நிலம்
பெரும்பாறை, தாண்டிக்குடி, தடியன்டிசை, புல்லாவெளி நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏராளமான இடங்கள் உள்ளன. இதில் தாண்டிக்குடியில் உள்ள மத்திய அரசின் காபி வாரியமும் ஒன்றாகும்.
காபி வாரியம் சார்பில், தடியன்குடிசையில் வனத்துறைக்கு சொந்தமான 26 ஏக்கர் நிலத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குத்தகைக்கு எடுத்து இருந்தனர். இதன் மூலம் வனத்துறைக்கு வருமானம் கிடைத்தது.
இந்தநிலையில் குத்தகை காலம் முடிவடைந்ததையொட்டி வனத்துறையினரிடம் அந்த நிலம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது அங்கு காபி, மிளகு செடிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த நிலத்தில் கடந்த 1960-ம் ஆண்டு கட்டப்பட்ட குடியிருப்பு, ஓய்வு விடுதி, கூட்ட அரங்கு ஆகியவை உள்ளன.
சேதமடைந்த கட்டிடங்கள்
ஓடுகளால் ஆன இந்த கட்டிடத்தை முறையாக பராமரிக்கவில்லை. இதனால் கட்டிடங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த கட்டிடங்களுக்குள் சமூக விரோத செயல்களும் நடப்பதாக புகார் கூறப்படுகிறது.
எனவே சேதமடைந்த நிலையில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான கட்டிடங்களை பராமரித்து, சுற்றலா பயணிகள் தங்குவதற்கான விடுதியாக மாற்ற வேண்டும். மேலும் அந்த பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கான முயற்சியில் வனத்துறையும், சுற்றுலாத்துறையும் ஈடுபட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மலைக்கிராம மக்கள் உள்ளனர்.