சித்தன்னவாசல் சுற்றுலா தலம் மேம்படுத்தப்படுமா?

சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் உணவு அறை, போதுமான படகு வசதி தேவை என்றும், சுற்றுலா தலத்தை மேம்படுத்த கோரியும், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2022-09-26 17:44 GMT

அன்னவாசல்:

சித்தன்னவாசல் சுற்றுலா தலம்

புதுக்கோட்டையிலிருந்து விராலிமலைக்கு செல்லும் சாலையில் அன்னவாசல் அருகில் அமைந்துள்ளது சித்தன்னவாசல். இதற்கு, 'தென்னிந்தியாவின் அஜந்தா குகை' என்ற சிறப்பு பெயரும் உண்டு. சித்தன்னவாசல் என்றால் இதற்கு துறவிகள் இருப்பிடம்' எனப் பொருள். சித்தன்னவாசல் ஓவியங்கள், 7-ம் நூற்றாண்டில் (கி.பி.600 - 630) சிம்மவிஷ்ணுவின் மகன் மகேந்திரவர்மனால் வரையப்பட்டவை என சொல்லப்படுகிறது. பாறை படுக்கைகளில் பிராமி எழுத்தில் எழுதப்பட்ட தமிழ் மொழி கல்வெட்டு உள்ளது.

கி.பி.8, 9-ம் நூற்றாண்டுகளுக்குரிய தமிழ் எழுத்துகளால் பொறிக்கப்பட்ட சமணத் துறவிகளின் பெயர்களும் அதில் உள்ளன. இந்தப்பகுதி `ஏழடிபட்டம்' என்று அழைக்கப்படுகிறது கி.பி. 10-ம் நூற்றாண்டு வரை சமண முனிவர்கள் இந்தக் குகையில் தங்கியிருக்க வேண்டும் என்பதற்கு, இங்கு உள்ள கல்வெட்டுகளே ஆதாரம். பண்டையகால தமிழகம், ஓவியக் கலையிலும் நடனக் கலையிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அடைந்திருந்த சிறப்பை இந்த ஓவியங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

ஓவியங்கள்

சித்தன்னவாசல் ஓவியங்கள், பல்லவர் காலத்து ஓவியங்கள் என்று வரலாற்று ஆசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் கூறிவந்துள்ளனர். மேல் விதானத்தில் உள்ள ஓவியம் ஒரு தாமரைக் குளத்தைக் காட்டுகிறது. அதில் தாமரை மலர்களும் மலராத மொட்டுகளும் சிவன் பக்தர்களாகிய சமணப் பெரியோர்களும் காட்சியளிக்கின்றனர். இடதுபக்கத் தூணில் நடன மங்கையின் ஓவியம் வரையப்பட்டுள்ளது. வலதுபக்கத் தூணில் நடன மங்கை தனது இடது கையைத் துதிக்கைபோல் வளைத்திருக்கிறார். முகம் சோகமாக இருக்கிறது. மேலும், இந்த ஓவியத்தில் பறவைகள், மீன்கள், எருமை மாடுகள், யானை என பல உயிர்களும் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன. இரு சமணர்கள் கைகளால் தாமரை மலர்களைப் பிடித்துக்கொண்டு குளத்தின் அழகை ரசிப்பது போன்று ஓர் ஓவியமும் நம்மை ஈர்க்கிறது. நடுமண்டபத்தை அடுத்து இருப்பது கோவில். வலப்பக்கமும், இடப்பக்கமும் சமண தீர்த்தங்கர் சிலையும், சமணத் தலைவர் சிலையும் உள்ளன.

சித்தன்னவாசலை சுற்றி குடுமியான்மலை, நார்த்தாமலை, அண்ணாபண்ணை மற்றும் சிறப்பு மிக்க கோவில், தேவாலயம், பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களும் உள்ளது. சித்தன்னவாசல் சுற்றுலா தலத்திற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமின்றி உலக அளவில் சுற்றுலா பயணிகள் என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்களும், பெண்களும் குடும்பம் குடும்பமாக வருகை தருவர். சில சுற்றுலா பயணிகள் தலத்திற்கு மதிய உணவுடன் வந்து செல்வர்.

ஜல்லிக்கட்டு காளை சிலை

சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தை பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள குகை ஓவியம், மலை மீது அமர்ந்த சமணர் படுக்கையான ஏழடி பட்டம் போன்றவற்றை கண்டு களிப்பர். மேலும் சிறுவர் பூங்கா, விளையாட்டு சர்கல்கள், மண் யானைகள் போன்றவற்றில் விளையாடியும், செல்போன், கேமராக்களில் புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்வர்.

மலையின் அழகை ரசித்தவாறு சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வர். சித்தன்னவாசல் சுற்றுலாத் தலத்தில் நுழைவு வாயிலில் ஜல்லிக்கட்டை போற்றும் விதமாக ஜல்லிக்கட்டு காளையை வீரர் ஒருவர் அடக்குவது போன்று சிலை அமைக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு

சுற்றுலாதலத்திற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் காலை முதல் மாலை வரை இங்கேயே பொழுதை கழிக்கின்றோம். ஆனால் எங்களுக்கு தேவையான உணவுகள் கிடைப்பதில்லை. கொண்டுவந்து சாப்பிடுவதற்கு உணவு அறை இல்லை. மற்ற இடங்களில் அமர்ந்து சாப்பிடும் போது குரங்குகள் உணவுகளை பிடிங்கி சென்றுவிடுகின்றன. படகுகுளத்தில் போதுமான படகுகள் இல்லை. இதனால் படகு சவாரி செய்ய பல மணிநேரம் காத்து கிடக்கும் அவலம் உள்ளது. எனவே புதிய படகுகளை இயக்க வேண்டும். சேதமடைந்த படகுகளை சீரமைக்க வேண்டும். சிறுவர் பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கு உண்டான பொருட்கள் பல உடைந்து விளையாட முடியாமல் உள்ளது. அவைகளை சரி செய்து இன்னும் பல விளையாட்டு உபகரணங்களை சேர்க்க வேண்டும். பல வருடமாக செயல்படாமல் இருக்கும் இசை நீரூற்றை திறந்து சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு விட வேண்டும். மொத்தத்தில் சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தை புதுப்பிக்க வேண்டும் என்றனர். மேலும் சுற்றுலா தலம் மேம்படுத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் சுற்றுலா பயணிகள் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்