வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படுமா?

வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-04-30 19:14 GMT

குண்டும், குழியுமான சாலைகள்

வடகாட்டில் இருந்து கொத்தமங்கலம் செல்லும் தார் சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்டது. இச்சாலை ஆரம்பித்த ஒரு வருடத்திலேயே ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக காட்சியளித்து வருகின்றன. இதேபோல் வடகாடு மல்லிகை புஞ்சை ரோடு, பரமநகர், பனசக்காடு சாலை மற்றும் மாங்காடு சோம்பிய குடியிருப்பு, செட்டிகொல்லை, பெரியகொல்லை, சுந்தரகுடியிருப்பு, அடைக்கலகாத்தன் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளன.

இதனால் மேற்கண்ட சாலைகள் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், விவசாயிகள், பள்ளி செல்லும் மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

கீழே விழுந்து காயம்

வடகாடு பகுதியை சேர்ந்த முருகேசன்:- வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பலாப்பழங்கள், பூக்கள் மற்றும் வாழைத்தார், கத்தரிக்காய், புடலங்காய், பச்சை மிளகாய், தேங்காய் உள்ளிட்டவைகளை பெரும்பாலும் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மூலமாகவே ஏலக்கடைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில், இப்பகுதிகளில் உள்ள தரமற்ற சாலைகளால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அவ்வப்போது வாகனங்களுடன் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பழுதடைந்த சாலைகளை உரிய முறையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலணிகளை அணியாமல்...

மாங்காடு பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி:- கிராமப்புறங்களில் வசிக்கும் சிலர் காலணிகள் அணியாமலேயே நடந்து சென்று வருகிறார்கள். அவர்கள் ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலையில் மிகவும் சிரமப்பட்டு சென்று வருகிறார்கள். இதேபோல் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே கிராமப்புற சாலைகள் அனைத்தையும் மேம்படுத்த அரசு முன்வர வேண்டும்.

ஜல்லிக்கற்கள் பெயர்ந்து...

வடகாடு பகுதியை சேர்ந்த சந்திரமோகன்:- வடகாடு, மாங்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் உள்ள கிராமப்புற ஊரக சாலைகள் பெரும்பாலும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக வடகாடு மல்லிகை புஞ்சை வழியாக செல்லும் இணைப்பு சாலை, வடகாட்டில் இருந்து கொத்தமங்கலம் செல்லும் சாலை, வடகாட்டில் இருந்து பனசக்காடு செல்லும் சாலை, வடகாடு பரமநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மேலும் இந்த சாலைகள் உடனடியாக சீரமைக்கப்படுவது இல்லை. மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் குண்டும், குழியுமாக இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். எனவே மேற்கண்ட சாலைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தரமான சாலைகளை அமைக்க வேண்டும்

மாங்காடு பகுதியை சேர்ந்த மாரியம்மா:- ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சாலை மேம்பாடு முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. இதில் நகர்ப்புறங்களில் ஒரு மாதிரியும், கிராமப்புறங்களுக்கு ஒரு மாதிரியுமாக சாலை அமைக்காமல் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிராமப்புற சாலைகளை தரமாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் கிராமப்புற மக்களின் வளர்ச்சியும், நல்ல முன்னேற்றமும் காண முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்