கறம்பக்குடி கால்நடை மருத்துவமனை மேம்படுத்தப்படுமா?

போதிய ஊழியர்கள் இல்லை, மருந்து, மாத்திரை பற்றாக்குறை போன்ற குறைபாடுகளுடன் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே இயங்கும் கறம்பக்குடி கால்நடை மருத்துவமனை மேம்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

Update: 2023-02-15 19:22 GMT

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே...

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவில் 39 ஊராட்சிகள் உள்ளன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயமே பிரதானம் என்ற போதும் ஆடு, மாடு வளர்ப்பும் இப்பகுதியில் பிரதானமாக உள்ளது. இயற்கை சீற்றங்களால் விவசாயம் கைகொடுக்காத போது கால்நடை வளர்ப்பே பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது.

கறம்பக்குடியில் செயல்பட்டுவரும் கால்நடை மருத்துவமனை போதிய வசதிகள் இன்றி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே இயங்கி வருகிறது.

மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்

தாலுகா தலைமையிடம் என்பதால் ஆடு, மாடுகளுக்கான சிகிச்சைக்கு தினமும் ஏராளமானோர் கறம்பக்குடி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வருகின்றனர். ஆனால் மருத்துவமனை திறந்து இல்லாததால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்காமலே கூட்டி செல்லும் நிலை உள்ளது. இதனால் கால்நடை வளர்ப்போர் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாததால் நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் கால்நடைகள் பலியாகும் அவலம் தொடர்கிறது. எனவே கறம்பக்குடி கால்நடை மருத்துவமனையை ஒரு தாலுகா தலைமையிடத்திற்கான மருத்துவமனையாக தரம் உயர்த்தி மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து கறம்பக்குடி பகுதியில் கால்நடை மற்றும் கோழி, வாத்து உள்ளிட்டவை வளர்க்கும் விவசாயிகள் கூறியதாவது:-

போதிய பணியாளர்கள் இல்லை

கறம்பக்குடி தென்னகரை ேசர்ந்த ரெங்கசாமி:- கறம்பக்குடியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கால்நடை மருந்தகம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை இன்னும் எந்த கூடுதல் வசதிகளும் இன்றி அதே நிலையில் உள்ளது. கால்நடை எண்ணிக்கைகள் அதிகரித்து இருப்பதற்கு ஏற்ற வகையில் ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை. ஒரு டாக்டர் மற்றும் 2 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களும் அவ்வப்போது கூடுதல் பணிக்காக கிராம பகுதிகளில் உள்ள கிளை மருத்துவமனைகளுக்கு செல்லவேண்டி உள்ளது. இதனால் போதிய பணியாளர்கள் இன்றி கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை பெறமுடியாத நிலை உள்ளது. எனவே கறம்பக்குடி கால்நடை மருத்துவமனையை தரம் உயர்த்தி மேம்படுத்த வேண்டும்.

காத்திருந்து திரும்பி செல்லும் அவலம்

கறம்பக்குடியை சேர்ந்த மணிகண்டன்:- தாலுகா தலைமை இடத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை வாரத்தில் 3 நாட்கள் பூட்டி இருப்பது வேதனையாக உள்ளது. மேலும் மருத்துவமனையில் போதுமான மருந்து, மாத்திரைகள் இருப்பது இல்லை. இதனால் பொதுமக்கள் தனியார் மருந்தகங்களில் பணம் கொடுத்து ஊசி, மருந்து வாங்க வேண்டி உள்ளது. எனவே ஏழை, எளிய மக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். மருத்துவமனை எப்போது திறக்கப்படும் என்று நிச்சயமற்ற நிலையில் ஆடு, மாடுகளை கூட்டி வந்து காத்திருந்து திரும்பி செல்லும் அவலம் உள்ளது. எனவே கறம்பக்குடி கால்நடை மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

மானியவயலை சேர்ந்த வீரப்பன்:- ஆடு, மாடு மற்றும் கோழிகளுக்கு தற்போது பல வகை தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. ஆனால் அதற்கான எந்த தடுப்பு மருந்துகளும் கறம்பக்குடி மருத்துவமனையில் இருப்பது இல்லை. கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்புக்கு பல திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல் படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை பெறமுடியாத நிலை தான் இங்கு உள்ளது.

எனவே கிராம பகுதி மக்களின் வாழ்வாதாரமாக உள்ள கால்நடைகள் மற்றும் பறவை இனங்களுக்கு உரிய சிகிச்சை தடை இன்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்