பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு வேளாண்மை கல்லூரி தொடங்கப்படுமா?

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு வேளாண்மை கல்லூரி தொடங்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

Update: 2023-08-06 16:58 GMT

விவசாயம், கால்நடை வளர்ப்பு

பெரம்பலூர் விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால் இங்கு பெரும்பாலானோர் விவசாயத்தையே நம்பியே உள்ளனர். இங்கு அனைத்து பருவங்களிலும் அனைத்து வகையான பயிர்களும் பயிரிடப்படுகின்றன. குறிப்பாக சின்ன வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி, நெல், கரும்பு, நிலக்கடலை ஆகியவை அதிகளவில் பயிரிடப்படுகின்றன.

10 ஆண்டுகளுக்கு மேலாக சின்ன வெங்காய சாகுபடியில் தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தில் தொடர்ந்து உள்ளது. இதேபோல் மக்காச்சோளம், பருத்தி சாகுபடியிலும் சிறப்பிடம் பெற்று விளங்குகிறது. மேலும் விவசாயிகள் கால்நடைகளை வளர்ப்பதால் மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் பால் உற்பத்தியிலும் 2-வது இடத்தில் உள்ளது.

அரசு வேளாண்மை கல்லூரி

இதுதவிர மாவட்டத்தில் வேப்பந்தட்டை வட்டாரத்தில் பருத்தி ஆராய்ச்சி நிலையம் உள்ளது. ஆனால், முழுக்க முழுக்க விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு வேளாண்மை கல்லூரி இல்லாதது விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் மத்தியிலும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும் என்று வாக்குறுதியை அளித்து வாக்காளர்களிடையே ஓட்டு சேகரிக்கின்றனா். ஆனால் இதுவரை மாவட்டத்தில் அரசு வேளாண்மை கல்லூரி தொடங்கப்படவில்லை. இதுகுறித்து விவசாயிகள் உள்ளிட்டோர் தெரிவித்துள்ள கருத்துகள் விவரம் வருமாறு:-

போதிய வருமானம் இல்லை

பெரம்பலூர் தாலுகா, பொம்மனப்பாடியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சரவணன்:- விவசாயிகளின் பிள்ளைகள் வேளாண்மை சார்ந்த படிப்புகளை படிக்க அரசு கல்லூரியில் இடம் கிடைத்தால் அருகே உள்ள மாவட்டங்களுக்கு சென்று தான் படிக்க வேண்டியிருக்கிறது. தனியார் வேளாண்மை கல்லூரிகளில் படிக்க வைக்க விவசாயிகளுக்கு போதிய வருமானம் இல்லை. விவசாயத்தில் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக திகழும் பெரம்பலூரில் விவசாயிகள், மாணவர்களின் நலன் கருதி அரசு வேளாண்மை கல்லூரி தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும்.

பூச்சி தாக்குதல்

வேப்பந்தட்டை தாலுகா, பூலாம்பாடியை சேர்ந்த திருவள்ளுவர் உழவர் மன்ற தலைவர் வரதராசன்:- பின்தங்கிய மாவட்டமாக பெரம்பலூர் இருந்தாலும் கல்வியில் முன்னேற்றம் அடைந்து திகழ்கிறது. ஆனால் இங்கு அரசு வேளாண்மை கல்லூரி இல்லை. இங்கு 2 தனியார் வேளாண்மை கல்லூரிகள் உள்ளன. மக்காச்சோளம், வெங்காயம், பருத்தி போன்ற பயிர்கள் அடிக்கடி சாகுபடி செய்யப்படுகின்றன. மேலும் அவை பூச்சி தாக்குதலால் பாதிக்கப்படுகிறது. பின்னர் வெளி மாவட்ட ஆராய்ச்சியாளர்கள் வந்து ஆய்வு செய்கின்றனர். இங்கு அரசு வேளாண்மை கல்லூரி இருந்தால் பயிர் சேதத்தை உடனுக்குடன் சரி செய்ய முடியும். மேலும், இங்கு விவசாயிகள், மாணவர்கள் நேரடியாக விவசாயம் குறித்து போதிய பயிற்சி பெறலாம். எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் உடனடியாக ஆராய்ச்சி நிலையத்துடன் கூடிய அரசு வேளாண்மை கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டம் முன்னேற்றம் அடையும்

குன்னம் தாலுகா, நல்லறிக்கையை சேர்ந்த முரளி:- நான் சென்னை கோயம்பேடு காய்கறி மாா்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறேன். கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயம் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அதிகம் வருகிறது. சின்ன வெங்காயம் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு வேளாண்மை கல்லூரி தொடங்கினால் விவசாயிகளின் பிள்ளைகள் தவிர மற்றவர்களும் படிக்க முன் வருவார்கள். தனியார் வேளாண்மை கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இங்கு அரசு வேளாண்மை கல்லூரி வந்தால், மாணவர்களுடன், விவசாயிகளும் பயனடைவார்கள். மாவட்டமும் முன்னேற்றம் அடையும்.

விவசாயிகள் பயன்பெறுவர்

ஆலத்தூர் தாலுகா, சாத்தனூரை சேர்ந்த விவசாயி முத்தமிழ்ச்செல்வன்:- கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு வேளாண்மை கல்லூரி தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகிறார்கள். தனியார் வேளாண்மை கல்லூரியில் படிக்க வேண்டும் என்றால் நிறைய செலவாகுவதால், 12-ம் வகுப்பில் வேளாண்மை சம்பந்தமாக படிக்கும் மாணவர்கள் உயர்கல்வியில் வேளாண்மை படிக்க முடியாமல், கல்லூரியில் ஏதாவது கலை படிப்பை படிக்க நேரிடுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்