நீதிமன்ற சாலை அகலப்படுத்தப்படுமா?

கூடலூரில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண பழைய நீதிமன்ற சாலை அகலப்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2022-12-18 18:45 GMT

கூடலூர், 

கூடலூரில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண பழைய நீதிமன்ற சாலை அகலப்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

போக்குவரத்து நெரிசல்

கூடலூரில் பள்ளி, கல்லூரி நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் அவதியடைந்தனர். இதன் காரணமாக காலை நேரத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சரக்கு லாரிகள் கூடலூர் நகருக்குள் இயக்க போலீசார் தடை விதித்து உள்ளனர்.

மேலும் கூடலூர் ஐந்து முனை சந்திப்பு பகுதியில் இருந்து ஆர்.டி.ஓ. மற்றும் தாசில்தார் அலுவலகங்களுக்கு செல்லும் பழைய நீதிமன்ற சாலையில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் நடந்து செல்கின்றனர். தொடர்ந்து காலை, மாலை நேரத்தில் ஏராளமான ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலால் இந்த சாலை திணறி வருகிறது. இதை தவிர்க்க சாலையோர முட்புதர்களை அகற்ற வேண்டும்.

அகலப்படுத்த வேண்டும்

மேலும் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீண்ட காலமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. தற்போது குறுகலான சாலையால் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இட வசதி இல்லை. ஆர்.டி.ஓ. உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் இந்த சாலையில் இருப்பதால், வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை வேறு வழியின்றி சாலையோரத்தில் நிறுத்தி விட்டு செல்கின்றனர்.

இதனால் மேலும் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. தொடர்ந்து மாணவ-மாணவிகள் நடந்து செல்ல முடிவதில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் சாலையோர முட்புதர்களை அகற்றுவதோடு, அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்