விவசாய பாசனத்துக்காக முசிறியில் இருந்து பெரம்பலூருக்கு காவிரி நீர் கொண்டு வரப்படுமா?

விவசாய பாசனத்துக்காக முசிறியில் இருந்து பெரம்பலூருக்கு காவிரி நீர் கொண்டு வரப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-08-27 18:30 GMT

கிணற்று பாசனம் மூலம் விவசாயம்

விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டு உள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலும் கிணற்று பாசனம் மூலம் விவசாயம் செய்யப்படுகிறது. போதியளவு ஆற்றுப்பாசனம் வசதி கிடையாது. மழைக்காலங்களில் தான் அந்த ஆற்றுப்பாசனமும் உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் காவிரி ஆறும் கிடையாது. ஆனாலும் மாவட்டத்தில் சின்ன வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி, நெல், நிலக்கடலை, கரும்பு முதலியவை விளைவிக்கப்படும் முக்கியமான பயிர்கள் ஆகும்.

தமிழ்நாட்டில் சின்ன வெங்காய உற்பத்தியில் பெரம்பலூர் மாவட்டம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அதற்கு அடுத்தபடியாக மக்காச்சோளம், பருத்தி அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இறுதியில் போதியளவு மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. மேலும் இந்த ஆண்டு தொடக்கத்திலும் போதியளவு மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே இருக்கிறது.

தண்ணீர் பற்றாக்குறை

கோடை காலத்தில் இருந்த வெயிலின் தாக்கத்தை விட தற்போது கடந்த சில நாட்களாகவே அதிகமாக காணப்பட்டு வருகிறது. இதனால் ஏற்கனவே வானம் பார்த்த பூமியான வறட்சி மாவட்டமான பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர் அதாள பள்ளத்துக்கு சென்று விட்டன. மேலும் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாய கிணறுகளில் தண்ணீர் அடியில் சென்று விட்டது. குறிப்பாக மலையடிவாரங்களில் உள்ள விவசாய கிணற்றுகளில் தண்ணீர் இல்லை என்றே கூறலாம். அந்த அளவுக்கு அங்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் சில விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு காசு கொடுத்து தண்ணீர் வாங்கி பாய்ச்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்படி சென்றால் விவசாயிகள் விளை நிலங்கள் விலை நிலங்களாக மாற வாய்ப்புள்ளது. பெரம்பலூர் மாவட்டத்துக்கு காவிரி ஆற்றுப்பாசனம் கொண்டு வந்தால் விவசாயத்துக்கு தண்ணீர் பற்றாக்குறையும் இருக்காது. நிலத்தடி நீர்மட்டமும் உயரும். திருச்சி மாவட்டம், முசிறியில் இருந்து காவரி நீரை கால்வாய் மூலம் பெரம்பலூருக்கு கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறிய கருத்துகள் விவரம் வருமாறு:-

ஏரிகள் மூலம்...

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயராமன்:- திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து பெரம்பலூருக்கு கால்வாய் மூலம் காவிரி நீர் கொண்டு வரும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கால்வாய் மூலம் பெரம்பலூருக்கு கொண்டு வரப்படும் காவிரி நீரை பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் நிரப்பி ஏற்கனவே உள்ள பாசன வாய்க்கால்கள் மூலம் காவிரி நீரை விவசாயத்துக்கு பயன்படுத்தலாம். இந்த திட்டத்தை விரைந்து கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும்.

கைகொடுக்கும் விவசாயம்

தமிழ்நாடு கிணற்று பாசன விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் நாரயணசாமி:- திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து துறையூர் மார்க்கமாக கீராம்பூர் ஏரி அல்லது பெரம்பலூர் மாவட்டம், மங்கூன் வழியாக காவிரி நீரை கால்வாய் மூலம் களரம்பட்டி ஏரிக்கு கொண்டு வரப்பட்டால் லாடபுரம் 2 ஏரிகளும், அதனை தொடர்ந்து குரும்பலூர், செஞ்சேரி, அரணாரை, பெரம்பலூர் பெரிய ஏரி, வெள்ளந்தாங்கியம்மன் ஏரி, துறைமங்கலம் பெரிய ஏரி, சிறிய ஏரி வரை காவிரி நீரை கொண்டு செல்ல வாய்க்கால் வசதி இருக்கிறது. பின்னர் காவிரி நீர் மருதையாற்றில் கலந்து விடும். சாத்திய கூறுகள் இருந்தால் களரம்பட்டி ஏரிக்கு காவிரி நீரை கொண்டு வரலாம். அல்லது லாடபுரம் ஏரிக்கு காவிரி நீரை கொண்டு வரலாம். மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் காவிரி நீரை கொண்டு செல்லலாம். பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது ஒரு தனியார் டயர் தொழிற்சாலை மட்டுமே உள்ளது. அதிலும் பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மாவட்ட மக்களுக்கு எப்போதும் விவசாயம் தான் கைகொடுக்கும். பெரும்பாலும் கிணற்று பாசனம் உள்ள பெரம்பலூர் மாவட்டத்துக்கு காவிரி நீரை கொண்டு வந்தால் விவசாயம் இன்னும் வளர்ச்சி அடையும். வீணாக கடலுக்கு போகிற போது தான் காவிரி நீரை பெரம்பலூர் மாவட்டத்துக்கு திருப்பி விட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டால் ஏற்கனவே காவிரி நீர் பாசனம் பெறும் விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள்.

நிலத்தடி நீர் மட்டம் உயரும்

ஆலத்தூர் தாலுகா, நாட்டாமங்கலத்தை சேர்ந்த விவசாயி பாபநாசன்:- காவிரி ஆற்றின் நீரை கால்வாய் மூலமாக பெரம்பலூர் மாவட்டத்திற்கு கொண்டு வந்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள். நிலத்தடி நீர் மட்டமும் உயரும், குடிநீர் பிரச்சினையும் ஏற்படாது. இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு ரூ.200 முதல் ரூ.300 கோடி வரை செலவாகலாம். இதை மாநில அரசு அல்லது மத்திய அரசு செயல்படுத்தினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏற்கனவே மேட்டூர் அணையின் உபரி நீரான காவிரி நீரை இணைப்பு கால்வாய் துறையூர், தா.பேட்டை வரை உள்ள ஏரிகளில் தேக்கி விவசாய பாசனத்திற்கு பயன்படுத்தும் விதமாக சரபங்கா நதி, திருமணிமுத்தாறு மற்றும் அய்யாறு ஆறுகளை இணைத்து கீராம்பூர் ஏரி வரை நீர் வழங்கும் திட்டம் தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தையும் இணைத்தால் எளிதாக காவிரி நீரை கொண்டு வந்து விடலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆய்வு செய்ய வேண்டும்

ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டத்தில் நீர் நிலைகளை பராமரிக்க போதிய நிதி இல்லை என்று கூறி, சில நீர் நிலைகளில் தான் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்துக்கு கால்வாய் மூலம் காவிரி நீர் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு பெரிய நிதி தேவைப்படும். இந்த திட்டம் கொண்டு வர சாத்திய கூறுகள் இருக்கிறதா? என்று முதலில் தமிழக அரசு சம்பந்தப்பட்ட துறை வல்லுனர்களை கொண்டு குழு அமைத்து முறையாக ஆய்வு செய்ய வேண்டும். சாத்திய கூறுகள் இருந்தால் நிதி ஒதுக்கி விரைந்து திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்