பரப்பலாறு அணையில் படகு சவாரி தொடங்கப்படுமா?

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பரப்பலாறு அணையில் படகு சவாரி தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-12-31 20:55 GMT

பரப்பலாறு அணை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் மலை முகடுகளுக்கு இடையே ரம்மியமாக அமைந்துள்ளது, பரப்பலாறு அணை.

கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பாச்சலூர், வடகாடு, சிறுவாட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறு ஓடை ஆறாக மாறி வடகாடு மலைக்கிராமத்தில் உள்ள பரப்பலாறு அணைக்கு தண்ணீர் வருகிறது. இந்த அணை முற்றிலும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் மொத்தம் உயரம் 90 அடி ஆகும். கடந்த 1975-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறக்கப்பட்டது, இந்த அணை.

அணையை சுற்றி அடர்ந்து வளர்ந்த மரங்களை கொண்ட மலைகள் இயற்கை அரணாக உள்ளன. இந்த அணைப்பகுதி சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. அணையை பார்வையிடுவதற்காக தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தருகின்றனர்.

முக்கிய நீராதாரம்

மேலும் ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக பரப்பலாறு அணை விளங்குகிறது. இதுதவிர ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள 6 பெரிய கண்மாய்களுக்கு பரப்பலாறு அணையில் இருந்து தண்ணீர் செல்கிறது. இதேபோல் நங்காஞ்சியாற்று படுகையில் விருப்பாச்சி முதல் ஜவ்வாதுபட்டி வரை அமைந்துள்ள தடுப்பணைகள், ஆழ்துளை கிணறுகளுக்கும் நீராதாரமாக உள்ளது.

பரப்பலாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கும்போது, கண்மாய்கள் நிரம்பி நங்காஞ்சியாற்றில் சென்று கலக்கிறது. பின்னர் இடையக்கோட்டையில் நங்காஞ்சியாறு அணையில் தண்ணீர் சேருகிறது. அந்த அணை நிரம்பியவுடன் கரூர் அமராவதி ஆற்றுக்கு தண்ணீர் செல்கிறது. இதனால் திண்டுக்கல், கரூர் ஆகிய 2 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக பரப்பலாறு அணை உள்ளது. சமீபத்தில் பெய்த தொடர் மழையால் பரப்பலாறு அணை தனது முழு கொள்ளளவான 90 அடியை எட்டியது. தற்போது அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

படகு சவாரி

இந்தநிலையில் பரப்பலாறு அணையை பார்வையிடுவதற்காக வரும் சுற்றுலா பயணிகளுக்கு, பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து அணைப்பகுதியில் பூங்கா அமைப்பதுடன், அணையில் படகு சவாரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் விடுமுறை நாட்களில் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அணையின் அழகை பார்த்து பொழுதுபோக்குவார்கள். அதேபோல் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரிக்கும். எனவே பரப்பலாறு அணையில் படகு சவாரி தொடங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

ஏழைகளின் கொடைக்கானல்

அர்ஜூன் (பா.ம.க. நகர செயலாளர், ஒட்டன்சத்திரம்):-

ஒட்டன்சத்திரம் பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாளாக உள்ளது. அனைத்து நாட்களிலும் உழைப்பவர்கள் ஒருநாள் சுற்றுலா பகுதிகளுக்கு சென்று ஓய்வெடுக்க வேண்டும் என்றால் நீண்ட தூரம் செல்ல வேண்டும். அதற்கு கால மற்றும் பணவிரயம் ஏற்படும். ஆனால் எங்கள் ஊருக்கு அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அழகுற அமைந்துள்ள பரப்பலாறு அணை பகுதியும் சுற்றுலா தலம் போல் விளங்குகிறது.

எனவே அங்கு அரசின் சார்பில் பூங்கா மற்றும் அணையில் படகு சவாரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அணைப்பகுதியை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். அப்போது தான் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இதனால் பாச்சலூர், வடகாடு உள்ளிட்ட மலைக்கிராமங்கள் வளர்ச்சி பெறும். பரப்பலாறு அணை பகுதி ஏழைகளின் குட்டி கொடைக்கானலாக மாறும்.

பூங்கா அமைக்க வேண்டும்

முகமது ரிஜ்வான் (சமூக ஆர்வலர், ஒட்டன்சத்திரம்):- பள்ளி குழந்தைகள், மாணவ-மாணவிகள் விடுமுறை காலங்களில் பொழுதை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கு ஒட்டன்சத்திரம் பகுதியில் இடமே இல்லாத நிலை உள்ளது. இதற்கு வரபிரசாதமாக பரப்பலாறு அணைப்பகுதி விளங்குகிறது. எனவே அணை பகுதியில் பூங்கா அமைக்க வேண்டும். அத்துடன் படகு சவாரி தொடங்குவதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவமணி (சமூக ஆர்வலர்):- பரப்பலாறு அணை பகுதியை சுற்றுலா தலமாக அறிவித்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அணையை பார்வையிடுவதற்காக வருகை தருவார்கள். இதனால் இங்குள்ள மழைவாழ் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். நகரங்களில் கிடைக்கும் வசதிகள் அனைத்தும் மலைக்கிராம மக்களுக்கும் கிடைக்கும். மேலும் அணையையும் முறையாக பராமரித்து தூர்வார வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்