அரியலூர் நகர்ப்பகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

அரியலூர் நகர்ப்பகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.;

Update:2023-06-10 00:24 IST

18 வார்டுகள்

அரியலூர் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அரியலூரில் அரசு பள்ளிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது.

மேலும் அரியலூரில் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களும், நீதிமன்றங்களும் உள்ளன. ஆனால் அரியலூர் நகர்ப்பகுதியில் அடிப்படை வசதிகள் போதிய அளவு செய்து தரப்படவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

அடிப்படை வசதிகள்

நகர்ப்பகுதியில் போதிய அளவு குடிநீர் வசதி இல்லை என்றும், குப்பைகள் முறையாக அள்ளப்படவில்லை, வடிகால்கள் தூர்வாரப்படுவதில்லை என்றும், சாலைகள் சீரமைக்கப்படவில்லை என்றும் பல்வேறு புகார்களை அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

நிதி இல்லை

அரியலூரை சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கர்:- அரியலூர் நகர்ப்பகுதியில் மாதத்தில் பாதி நாட்கள் காலை நேரத்திலும், மாலை நேரத்திலும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் காவிரி குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஆனால் தினமும் குடிநீர் வினியோகிக்கப்பட்டாலும் சுமார் ஒரு மணி நேரம் தான் வினியோகிக்கப்படுகிறது. போதிய அளவு குடிநீர் இல்லை. மேலும் சில நாட்களில் மின் தடை, மோட்டார் பழுது, குடிநீர் குழாய் உடைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை காட்டி குடிநீர் வினியோகிக்கப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். போதிய அளவு குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நகராட்சியில் மக்களுக்கு நலத்திட்டங்களை கொண்டு வருவதற்கு நிதி இல்லை என்றும் கூறி சமாளிக்கின்றனர்.

தற்காலிக பஸ் நிலையத்துக்கு செல்ல...

தற்போது அரியலூரில் பஸ் நிலையத்தை இடித்து, புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனால் தற்காலிக பஸ் நிலையம் அரியலூர்-திருச்சி சாலையில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் அந்த பஸ் நிலையத்துக்கு செல்லாமல், அரியலூர் பஸ் நிலையம் இருந்த இடத்தின் அருகேதான் பயணிகள் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். இதனால் அரியலூர் அண்ணா சிலை, விநாயகர் கோவில் அருகே எப்போதும் பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் சூழ்நிலை நிலவுகிறது. ஏற்கனவே அந்த பகுதிகள் அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை உள்ள பகுதி என்பதால் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். தற்போது பயணிகளும் பஸ்சுக்காக நிற்பதால் விபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.

மேலும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் இனி பஸ் ஏற மாணவ-மாணவிகள் கூட்டம் அதிகரிக்கும். எனவே புதிய பஸ் நிலைய கட்டிடம் கட்டப்பட்டு, திறக்கப்படும் வரை வெளியூர் செல்லக்கூடிய பஸ்கள் அரியலூர் நகர்ப்பகுதிக்குள் வராமல் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து செல்ல வேண்டும். அரியலூர் நகர்ப்பகுதியில் இருந்து தற்காலிக பஸ் நிலையத்துக்கு செல்ல அரசு டவுன் பஸ்களை 24 மணி நேரமும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பராமரிக்கப்படாத கழிவறை

அரியலூர் புதிய மார்க்கெட் தெருவை சேர்ந்த கே.எஸ்.ரவி:- அரியலூர் நகர்ப்பகுதியில் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் முறையாக அள்ளப்படுவதில்லை. முறையாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கழிவுநீர் வடிகால்கள், மழைநீர் வடிகால்கள் ஆகியவை முறையாக தூர்வாரப்படாததால் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி தூர்ந்து போய் காணப்படுகிறது. வடிகால்களை முறையாக தூர்வார வேண்டும். அரியலூர்-செந்துறை சாலையில் உள்ள நகராட்சி கழிவறை மற்றும் சில இடங்களில் உள்ள கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படாததால் பொதுமக்களுக்கு பயன்பாடில்லாமல் காணப்படுகிறது. கழிவறைகளை முறையாக பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும் கேபிள் டி.வி. வயர்கள் அறுந்து கீழே விழுந்து கிடப்பதால் பாதசாரிகள் காலில் சிக்குகிறது. இதனால் அவர்கள் கீழே விழுந்து காயமடைந்து எழுந்து செல்கின்றனர். இதனை தடுக்க வேண்டும்.

மேலும் அரசு அலுவலகங்களின் சுற்றுச்சுவரில் அனுமதியின்றி கட்சி சுவரொட்டி உள்ளிட்டவை ஒட்டப்பட்டு வருகிறது. சுவரொட்டி ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும். அரசு கட்டிட சுவர்களில் இயற்கை ஓவியங்கள், விழிப்புணர்வு ஓவியங்கள் வரைய வேண்டும். அரியலூர் நகர்ப்பகுதியில் உள்ள சாலைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. மேலும் தரைக்கடைகள் உள்ளிட்டவை போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுவதால் மேலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் உள்ளிட்டவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏரிகளுக்கு தண்ணீர்

அரியலூர் ராஜாஜி நகரை சோ்ந்த முன்னாள் கவுன்சிலர் சந்திரசேகர்:- மகளிர் சுகாதார வளாகங்களை முறையாக பராமரிக்க வேண்டும். மேலும் நகர்ப்பகுதியில் உள்ள ஏரிகளில், இருசைகுட்டை ஏரி, வண்ணான்குட்டை ஏரி உள்ளிட்டவைகளுக்கு தண்ணீர் வருவதில்லை. அந்த ஏரிகளுக்கு தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த ஏரிகளில் தண்ணீர் வந்தால்தான், சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் பிரச்சினை ஏற்படாது. சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சிக்கு நிரந்தர ஆணையர் இல்லாததால் அரியலூரில் பணிகள் முழுமையாக நடைபெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. ஆணையரை உடனடியாக நியமிக்க வேண்டும். அரியலூர் தற்காலிக பஸ் நிறுத்தத்தில் கூடுதலாக பயணிகள் நிழற்குடையை உடனடியாக அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது

இது குறித்து அரியலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) தமயந்தி கூறுகையில், அரியலூர் நகர்ப்பகுதியில் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஒரு சில பகுதிகளில் குடிநீர் பிரச்சினை உள்ளது. புதிய திட்டம் கொண்டு வரப்படவுள்ளதால் அரியலூரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். மேலும் நகராட்சி பகுதியையொட்டி, ஊராட்சி பகுதிகளும் உள்ளதால் கழிவுநீர் வடிகால்கள், மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்படுவதில் சிரமம் உள்ளது. தற்காலிக பஸ் நிலையம் தொடர்பாக கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்தப்படவுள்ளது, என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்