அன்னவாசல் பள்ளூரணி தூர்வாரப்படுமா?

அன்னவாசல் பள்ளூரணியில் கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பள்ளூரணி தூய்மைப்படுத்தி தூர்வாரப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-04-27 17:55 GMT

பள்ளூரணி

புதுக்கோட்டை- இலுப்பூர் சாலையில் அன்னவாசலில் பள்ளூரணி உள்ளது. இந்த பள்ளூரணியை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் தற்போது பள்ளூரணியில் தண்ணீர் குறைந்துள்ளதால் ஊரணியை சுற்றி துணிகழிவுகள், குப்பைகள், எரிந்தநிலையில் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் கொட்டி கிடக்கின்றன. மேலும் அந்த பகுதியில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகள் உள்ளே இறங்கி அசுத்தம் செய்கின்றன. இதனால் ஊரணியில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் இந்த ஊரணியை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

கோரிக்கை

மேலும் அன்னவாசலை சுற்றியுள்ள பொதுமக்கள் குளிப்பதற்கு இந்த ஊரணியை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது ஊரணி மிகவும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் பள்ளூரணியை தூர்வாரி தூய்மைப்படுத்தி பொதுமக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

தூர்வார வேண்டும்

அன்னவாசல் பகுதியை சேர்ந்த மீராமொய்தீன்:- புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை செல்லும் சாலையில் இந்த பள்ளூரணி இருப்பதால் இப்பகுதி பொதுமக்களும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பல ஆண்டுகளாக இந்த பள்ளூரணியை அதிக அளவு பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது பள்ளூரணி சுத்தம் இல்லாமல் கழிவுநீரை போன்று இருப்பதால் குளிப்பதற்கு உகந்ததாக இல்லை. இதனால் சிலர் பள்ளூரணி கரையில் உள்ள தண்ணீர் தொட்டியில் குளிக்கின்றனர். எனவே தற்போது தண்ணீர் குறைந்துள்ளதால் உடனடியாக ஊரணியை தூர்வாரி தூய்மைப்படுத்த வேண்டும்.

பதாகைகள் வைக்க வேண்டும்

அன்னவாசலை சேர்ந்த எடிசன்:- ஊரணியில் தற்போது அதிக அளவிலான கழிவுகள்-பிளாஸ்டிக் குப்பைகள், மதுபாட்டில்கள், தேவையற்ற வீட்டு கழிவுகள் கொட்டப்படுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்படுவதுடன், சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நோய்த்தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த ஊரணியை தூர்வாரி தூய்மைபடுத்தி விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

அன்னவாசலை சேர்ந்த பாலமுருகன்:- பள்ளூரணியில் கடந்த சில நாட்களாகவே பொதுமக்கள் துணி உள்ளிட்ட தேவையில்லாத கழிவுகளை உள்ளே கொட்டுகின்றனர். சிலர் கழிவு பொருட்களை ஊரணிக்கு அருகே தீ வைத்து கொளுத்தி விடுகின்றனர். மேலும் அருகில் உள்ள மண்டபத்தில் விசேஷங்கள் நடக்கும்போது அங்கு வெடிக்கப்படும் பட்டாசுகளின் துகள்கள் அனைத்தும் பறந்து வந்து ஊரணி தண்ணீரில் கலக்கின்றன. இதனால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்