நாகை புதிய கடற்கரையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படுமா?

நாகை புதிய கடற்கரையில் நாளுக்குநாள் சமூகவிரோதிகளின் அட்டகாசம் அதிகரித்து உள்ளதால், அங்கு புறக்காவல் நிலையம் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-04-18 18:45 GMT


நாகை புதிய கடற்கரையில் நாளுக்குநாள் சமூகவிரோதிகளின் அட்டகாசம் அதிகரித்து உள்ளதால், அங்கு புறக்காவல் நிலையம் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

புதிய கடற்கரை

நாகை நகராட்சிக்கு உட்பட்ட காடம்பாடி பகுதியில் புதிய கடற்கரை அமைந்துள்ளது. நாகை சுற்று வட்டார பகுதியில் உள்ள பொதுமக்களின் ஒரே பொழுதுபோக்காக இந்த புதிய கடற்கரை உள்ளது. மேலும் பொதுமக்கள் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் கடற்கரையில் கூடி விளையாடி மகிழ்ந்த வண்ணம் இருந்தனர்.

கடந்த சில நாட்களாக அங்கிருந்த மின்கம்பங்கள் சாய்ந்த நிலையிலும், மின் ஒயர்கள் வெளியே தெரியும் அளவிற்கு காணப்படுகிறது. மேலும் சமூக விரோதிகள், கடற்கரையில் குழந்தைகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சல்கள், ராட்டின சேர்கள் போன்றவற்றை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதனால் புதிய கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர்.

பொலிவிழந்து காணப்படுகிறது

இதனால் கடந்த சில மாதங்களாக இந்த புதிய கடற்கரை பொலிவிழந்து காணப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய கடற்கரையில் புறக்காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. இதனால் சமூக விரோதிகளின் நடமாட்டம் குறைந்து பாதுகாப்பாக காணப்பட்ட கடற்கரை இப்போது கேட்பாரற்று கிடக்கிறது. எனவே புதிய கடற்கரையில் மீண்டும் புறக்காவல் நிலையம் அமைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை போலீசார் உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும் ஆங்காங்கே பெரிய பெரிய பள்ளங்கள் உள்ளன. இ்தனால் குழந்்தைகள் விளையாடும்போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இரவில் மின் விளக்குகள் எரியவில்லை. இ்தனால் அந்த பகுதி இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாலை நேரங்களில் புதிய கடற்கரைக்கு வந்து செல்வதால் சமூகவிரோதிகளால் அசம்பாவிதம் ஏற்படும் என பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

புறக்காவல் நிலையம்

எனவே உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பொலிவிழந்து காணப்படும் புதிய கடற்கரையை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். மேலும் கடற்கரையில் புறக்காவல் நிலையம் அமைத்து அங்குள்ள விளையாட்டு பொருட்களை சேதப்படுத்தம் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்