கூடுதலாக கால்நடை ஆஸ்பத்திரிகள் திறக்கப்படுமா?

கொள்ளிடம் பகுதியில் கூடுதலாக கால்நடை ஆஸ்பத்திரிகள் திறக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-04-18 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் பகுதியில் கூடுதலாக கால்நடை ஆஸ்பத்திரிகள் திறக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

கால்நடை வளர்ப்பு

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றிய சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள், தொழிலாளர்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை தங்கள் வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வருகின்றனர். கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். தங்களின் பிள்ளைபோல வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு திடீரென நோய் தாக்குதல் ஏற்படும் நேரத்தில் அதனை சமாளிக்க முடியாமல் அவர்கள் திணறி வருகின்றனர்.

4 கால்நடை ஆஸ்பத்திரிகள்

இந்த கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கொள்ளிடம் வட்டாரத்திலேயே 4 இடங்களில் மட்டுமே கால்நடை ஆஸ்பத்திரிகள் உள்ளன. மேலும் 4 இடங்களில் உதவி மையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு டாக்டர்கள் மற்றும் உதவியாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கோதண்டராமன் கூறுகையில்:- கொள்ளிடம் ஒன்றிய பகுதியில் கால்நடை ஆஸ்பத்திரி குறைவாக உள்ளது. அது மட்டுமல்லாமல் கால்நடை மருத்துவர் மற்றும் உதவியாளர்கள் குறைவாக இருப்பதால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

தடுப்பூசிகள்

கால்நடைகளுக்கு ஊறிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் கால்நடைகள் இறந்து விடும் நிலையும் ஏற்படுகிறது. இதேபோல் நாய், பூனை, கோழிகள் உள்ளிட்ட செல்ல பிராணிகளுக்கும் உரிய மருத்துவ உதவியை பெற முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே கொள்ளிடம் பகுதியில் கூடுதலாக மேலும் 3 இடங்களில் கால்நடை ஆஸ்பத்திரிகள் திறக்கவேண்டும்.

தற்போது கோடைகாலமாக இருப்பதால் கால்நடைகளுக்கு வெப்பநிலை தாங்க முடியாமல் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது இதனை தடுக்கும் வகையில் கால்நடைத்துறை சார்பில் தடுப்பூசிகளை போட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்