மகளிர் காவல் நிலையம் அமைக்கப்படுமா?

இலுப்பூரில் மகளிர் காவல் நிலையம் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-01-05 19:17 GMT

மகளிர் காவல் நிலையம்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் திறக்கப்பட்டது. இதன் கட்டுப்பாட்டில் 4 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல், கிராமங்களில் வசிக்கும் பெண்கள் பயன்பெறும் வகையில் இலுப்பூரில் மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும்.

இலுப்பூரை மையமாகக் கொண்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றம், வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு போக்குவரத்து பனிமனை, ஆகியவை புதிதாக திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் ஆகிய 3 காவல் நிலையங்களை சேர்ந்த கிராமங்களில் வசிக்கும் பெண்களுக்கு உண்டாகும் பிரச்சினை குறித்து புகார் தெரிவிக்க கீரனூர், மகளிர் காவல் நிலையத்துக்கு செல்ல வேண்டியுள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை

இதனால், இப்பகுதி மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினை குறித்து கீரனூர் மகளிர் காவல் நிலையத்தில் தான் புகார் கொடுக்க வேண்டும.் அப்படி கீரனூர் செல்ல வேண்டுமானால் அதற்கு ஏற்ப விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் இருந்து செல்ல சரியான பஸ் வசதிகள் இல்லை. கணவர், மாமியார் கொடுமை, வீடு மற்றும் பொது இடங்களில் பாலியல் தொந்தரவு, பெண்களுக்கு பெண்களிடம் மட்டுமே சொல்ல கூடிய பிரச்சினைகள் என்று பல்வேறு வகையில் பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

இந்த பிரச்சினைக்கெல்லாம் பெண்கள் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றுதான் புகார் கூறும் நிலை உள்ளது. எனவே குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் இலுப்பூரில் மகளிர் காவல் நிலையம் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

குற்றங்கள் அதிகரித்து வருகிறது

பெருமநாடு அன்னலெட்சுமி:- பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனியாக மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும். தற்போது பெண்கள் தொடர்பான குற்ற விசாரணைக்கு அன்னவாசல், இலுப்பூர், விராலிமலையில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீரனூருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் அங்கு செல்வதற்கு சரியான போக்குவரத்து வசதி இல்லை. தற்போதைய சூழலில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை தடுக்க ஏதுவாக இலுப்பூரிலோ அல்லது அன்னவாசலிலோ புதிதாக மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும்.

போக்குவரத்து வசதி இல்லாததால் சிரமம்

முக்கண்ணாமலைப்பட்டி ஆசியாபானு:- குடும்ப தகராறு, வரதட்சணை கொடுமை பாலியல் கொடுமை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக இப்பகுதி பெண்கள் புகார் அளிக்க 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கீரனூர் மகளிர் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டும். சில நேரங்களில் மகளிர் காவல் நிலையங்களில் அதிகாரிகள் இல்லாததால் மறுநாள் வரும்படி கூறுவதால் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் பாதிக்கப்படும் பெண்கள் பலர் பயண தூரத்தை கருத்தில் கொண்டு புகார் கொடுக்க செல்வதில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணைக்கு அடிக்கடி வரவழைக்கப்படுவதால் போக்குவரத்து வசதி இல்லாததால் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே பெண்கள் நலன் கருதி இப்பகுதியிலேயே மகளிர் காவல் நிலையம் தொடங்க வேண்டும்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

மலைக்குடிப்பட்டி சண்முகசுந்தரம்:- அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமப்பகுதியில் இருக்கக்கூடிய பெண்களுக்கு ஏற்படக்கூடிய குடும்ப பிரச்சினைகள் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கும் சிரமங்களுக்கும் புகார் அளிக்க வேண்டும் என்றால் கீரனூர் மகளிர் காவல்நிலையம் செல்ல வேண்டியுள்ளது. அங்கு சென்று வர போதுமான போக்குவரத்து வசதியும் இல்லை. புகார் அளிக்கப்பட்ட வரவும், விசாரணைக்கு அழைத்து சென்று வரவும் மிகவும் சிரமப்படுகின்றனர். இலுப்பூர் பகுதியை மையமாக வைத்து மகளிர் காவல் நிலையத்தை தொடங்கி பெண்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலுப்பூர் போலீஸ் நிலையத்திற்கு அருகிலேயே பழைய போலீஸ் நிலைய கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடமானது எப்போது இடிந்து விழும் என்ற நிலையில் உள்ளது. பல்வேறு பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அந்த இடத்தில் மகளிர் காவல் நிலையம் அமைக்கலாம். இலுப்பூர் பகுதியில் இருக்கும் அரசு கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து அந்த இடத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்