வடபாதிமங்கலத்தில் கால்நடை ஆஸ்பத்திரி அமைக்கப்படுமா?

தொற்றுநோயால் அதிக அளவில் ஆடு, மாடுகள் உயிரிழந்து வருவதால் வடபாதிமங்கலத்தில் கால்நடை ஆஸ்பத்திரி அமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-01-29 18:45 GMT

கூத்தாநல்லூர்:

தொற்றுநோயால் அதிக அளவில் ஆடு, மாடுகள் உயிரிழந்து வருவதால் வடபாதிமங்கலத்தில் கால்நடை ஆஸ்பத்திரி அமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

வடபாதிமங்கலம்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள, வடபாதிமங்கலத்தில், புனவாசல், கிளியனூர், மாயனூர், உச்சுவாடி, சோலாட்சி, பூசங்குடி, மாதாகோவில் கோம்பூர், எள்ளுக்கொல்லை காலம் உள்ளிட்ட தெருக்கள் உள்ளன.

இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அதிகளவில் ஏழை, எளிய மக்கள் உள்ளனர். அப்பகுதி மக்கள் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வாழ்வாதாரத்தை பெருக்கி வருகின்றனர்.

சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்ட கவனை

இந்த நிலையில், அதிகளவில் கால்நடைகள் உள்ள வடபாதிமங்கலத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக கால்நடை ஆஸ்பத்திரி இல்லாத அவலநிலை உள்ளது.

வடபாதிமங்கலம், கிளியனூர் கிராம நிர்வாக அலுவலகம் எதிரே, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கவனை ஏற்படுத்தப்பட்டது. அதுவும் ஏற்படுத்தப்பட்டதோடு சரி. அந்த கவனை உள்ள இடத்திலும் கால்நடை டாக்டர்கள் வந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கவில்லை.

புதர்மண்டி கிடக்கிறது

கவனை அமைக்கப்பட்ட இடத்தில் தற்போது கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. வடபாதிமங்கலத்தில் கால்நடைகள் நோய் வாய்ப்படும் போது, அவைகளுக்கு போதிய சிகிச்சை அளிப்பதற்கு கால்நடை ஆஸ்பத்திரி இல்லை. அம்மைநோய், குடல்புண் நோய், டெட்டனஸ் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு அதிகளவில் கால்நடைகள் இறந்து வருகின்றன.

சில கால்நடைகளுக்கு நோய் ஏற்படும்போது, மிகவும் தூரத்தில் உள்ள லெட்சுமாங்குடி, சாத்தனூர், திட்டச்சேரி பகுதிகளில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவை இறந்து விடுகின்றன. நோய்தொற்று ஏற்படும் கால்நடைகள் இறப்பதை தடுக்க வடபாதிமங்கலத்தில் கால்நடை ஆஸ்பத்திரி அமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தொற்றுநோயால் ஆடு,மாடுகள் இறக்கின்றன

இதுகுறித்து வடபாதிமங்கலத்தை சேர்ந்த தமிழ்செல்வி கூறுகையில் வடபாதிமங்கலத்தில் ஏழை,எளிய மக்கள் தான் அதிகமாக வசித்து வருகின்றனர். தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ள ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றோம். ஆடு, மாடுகளுக்கு தொற்று நோய் ஏற்பட்டதால் அதற்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு வடபாதிமங்கலத்தில் கால்நடை ஆஸ்பத்திரி இல்லை.

ஒவ்வொரு ஆண்டிலும் கால்நடை இறப்பு அதிகரித்து வருகிறது. டெட்டனஸ் எனப்படும் உயிர் கொல்லி நோயால் பாதிக்கப்படும் கால்நடைகள் அதன் கை கால்களை மடக்கிபடுக்க முடியாமல், வாய் வழியாக நுரை வந்து சித்ரவதைப்பட்டு இறந்து விடுகின்றன.

கால்நடை ஆஸ்பத்திரி

இதுபோன்ற நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உடனடியாக போதிய சிகிச்சை அளிக்க முடியாத பட்சத்தில் கால்நடைகள் அதிகளவில் இறந்து போகும் அவல நிலை நீடித்து வருகிறது.

நோய் ஏற்பட்ட கால்நடைகளை வாகனங்களில் ஏற்றி நீண்ட தூரத்தில் உள்ள ஆஸ்பத்திக்கு கொண்டு சென்று வருவதிலும் பல்வேறு சிரமங்கள் உள்ளன. எங்கள் பகுதியில் நாளுக்கு நாள் நோய் தொற்று அதிகரிப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வடபாதிமங்கலத்தில் கால்நடை ஆஸ்பத்திரி அமைத்து தர வேண்டும் என்றார்.

விஷப்பூச்சிகள்

கால்நடை டாக்டர் அசோக் கூறுகையில் கால்நடை வளர்ப்பவர்கள் அதனை கண்ணும்,கருத்துமாக பார்த்து கொள்ள வேண்டும். ஆடு,மாடுகள் முறையான புல்களை தின்பதால் நோய் தொற்று ஏற்படுவதில்லை.

மாறாக விஷப்பூச்சிகள் சில இலைகள் மற்றும் புல்களில் இருக்கும். அதனை உண்ணும் போதும், அரிசி, நெல், பாலிதீன் பைகள் போன்றவைகளை உண்ணும் போதும் கால்நடைகள் நோய் வாய்ப்பட்டு இறந்து விடுகின்றன என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்