புதிய குடிநீர் திட்டம் தொடங்கப்படுமா?
மரப்பாலம் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் திண்டாடி வருகின்றனர். இதனால் புதிய திட்டம் தொடங்கப்படுமா? என எதிர்பார்த்து உள்ளனர்.
கூடலூர்,
மரப்பாலம் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் திண்டாடி வருகின்றனர். இதனால் புதிய திட்டம் தொடங்கப்படுமா? என எதிர்பார்த்து உள்ளனர்.
குடிநீர் வினியோகம்
கூடலூர் தாலுகா மரப்பாலம், பால்மேடு, சீனக்கொல்லி, டேன்டீ எண்.1 , அட்டிக்கொல்லி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு பால்மேடு பகுதியில் நெல்லியாளம் நகராட்சி மூலம் கிணறு மற்றும் மின் மோட்டார் அறை அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மின்மோட்டார் பழுதடைந்து விட்டால் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை தொடர்கிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு மின் மோட்டார் பழுதடைந்தது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
புதிய திட்டம்
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க புதிய குடிநீர் திட்டம் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். இது குறித்து நெல்லியாளம் நகராட்சி மக்கள் கூறியதாவது:-
மரப்பாலம் பகுதி மக்களின் குடிநீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய கூடுதலாக குடிநீர் கிணறு, மின் மோட்டார் அமைக்க வேண்டும். இதேபோல் காப்பு மேளம், வாழைக்கொல்லி பகுதியில் ஆதிவாசி மக்கள் வசிக்கும் இடத்திலும் குடிநீர் திட்டம் தொடங்க வேண்டும்.இது சம்பந்தமாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது செயல்பாட்டில் உள்ள மின் மோட்டார் பழுதடைந்து விட்டதால் குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, புதிய திட்டம் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.