வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

மசினகுடியில் வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2023-10-04 20:30 GMT

வன உயிரினங்களின் முக்கியத்தை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் அக்டோபர் 2 முதல் 8-ந் தேதி வரை வன உயிரின வார விழா நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

அதன்படி முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்ட பகுதியான மசினகுடி வன கோட்டம் சார்பில் பொக்காபுரம் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் வனஉயிரின பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. பேரணி முக்கிய சாலைகள் வழியாக சென்றது. வனவிலங்குகளை பாதுகாப்போம் என்பது உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பி சென்றனர்.

இதில் வனச்சரகர்கள் ஜான் பீட்டர், பாலாஜி, தயானந்தன் மற்றும் வனத்துறையினர், ஆதிவாசி மக்களின் பிரதிநிதிகள், அரசு பழங்குடியின உண்டு உறைவிட பள்ளி மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து வன உயிரின பாதுகாப்பு குறித்து வனச்சரகர்கள் மற்றும் ஆசிரியர்கள் விளக்கி பேசினர்.


இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-வன உயிரின வார விழா நடைபெறுவதால் இன்று (5-ந் தேதி) மாயார், ஆனைகட்டி, மசினகுடி மற்றும் தெங்குமரஹடா பகுதிகளில் சோலார் மின்வேலி அமைப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது. நாளை (6-ந் தேதி) வெள்ளிகிழமை பொக்காபுரம் அரசு பழங்குடி உண்டு உறைவிட பள்ளியில் வைத்து மசினகுடி சுற்றுவட்ட பள்ளிகுழந்தைகளுக்கு வனஉயிரினங்கள் குறித்த ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டி காலை 10 மணி முதல் நடக்கிறது. 7-ந் தேதி மசினகுடி, கல்லட்டி, வாழைத்தோட்டம், கல்லாம்பாளையம் மற்றும் தெங்குமரஹடா பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல் குறித்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் காலை 8 மணி முதல் நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்