கரைபுரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம்; மலைப்பாதையில் மண்சரிவு

கொடைக்கானலில் தொடர்மழை பெய்து வருவதால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-11-13 19:00 GMT


காட்டாற்று வெள்ளம்


'மலைகளின் இளவரசி' யான கொடைக்கானலில் நேற்று முன்தினம் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பேத்துப்பாறை பகுதியில் உள்ள பெரியாற்றில் திடீரென்று காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அங்கு வசிக்கிற 50-க்கும் மேற்ப‌ட்ட‌ குடும்பத்தினர் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல‌ முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் விவசாய பயிர்களும் தண்ணீரில் மூழ்கியது.


இதேபோல் பள்ளங்கி கோம்பை கிராமத்திற்கு செல்லக்கூடிய மலைப்பாதையின் குறுக்கே உள்ள ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மூங்கில் காடு கிராம மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இந்த பகுதிகளில் ஆற்றை கடக்க த‌ற்காலிக‌ பாலம் அமைத்து தரவேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பஸ் நிலையத்துக்குள் தண்ணீர்


கொடைக்கானலில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பிரையண்ட் பூங்காவில் 90.4 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர்ந்து மழை பெய்ததால் பஸ்நிலையத்துக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பயணிகள் பரிதவித்தனர்.


கொடைக்கானல் நகர் பகுதியில் கனமழைக்கு மலைப்பாதையில் பல இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டது. இது தகவல் அறிந்த நகராட்சி ஊழியர்கள் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு சென்று மண் சரிவுகளையும், மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளையும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


ராட்சத மரம் சாய்ந்தது


கொடைக்கானல் கான்வென்ட் ரோடு பகுதியில் ராட்சத மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் வில்பட்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


வார விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள் வருகை கணிசமான அளவில் இருந்தது. அவர்கள் மழையில் நனைந்தபடி இயற்கை எழில் காட்சிகளை கண்டுகளித்தனர். மேலும் நகரை ஒட்டி உள்ள வட்டக்கானல் அருவி மற்றும் பல்வேறு நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.


வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டும் அழகை பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தொடர் மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் வாரச்சந்தை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.


புல்லாவெளி நீர்வீழ்ச்சி


கொடைக்கானல் கீழ்மழை கிராமங்களான பெரும்பாறை, கானல்காடு, தடியன்குடிசை, பெரியூர், குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை மற்றும் சுற்றுவட்டாரத்தில் தொடர் மழை பெய்து வருகிறது.


இதனால் மலைப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஊற்று தண்ணீர் சிறு அருவியாக ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பெரும்பாறை அருகே இயற்கை எழில் மிகுந்த புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்