குரங்கு நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம்

பொள்ளாச்சி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

Update: 2023-05-02 18:45 GMT

பொள்ளாச்சி, 

பொள்ளாச்சி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

பலத்த மழை

பொள்ளாச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் பகல் நேரங்களில் குறைவாக இருந்தது. இதற்கிடையில் மாலை 5 மணிக்கு பிறகு பலத்த காற்று வீசியது. தொடர்ந்து பலத்த மழை பெய்ய தொடங்கியது.

2 மணி நேரமாக விடாது பெய்த மழையினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதற்கிடையில் பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதன் காரணமாக மின்சாரம் தடைபட்டது. மேலும் மரப்பேட்டை பகுதிகளில் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆச்சிபட்டியில் சங்கரா கார்டன் பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

காட்டாற்று வெள்ளம்

குரங்கு நீர்வீழ்ச்சி தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடப்பதால் சுற்றுலா பயணிகள் செல்ல கடந்த 3 மாதங்களாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை ஆழியாறு வனப்பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது. இதன்காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் திடீரென்று காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

இதையடுத்து தடையை மீறி சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க வனத்துறையினர் நுழைவு வாயில் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

சோலையார்-30 மி.மீ., பரம்பிக்குளம்-15 மி.மீ, வால்பாறை-12 மி.மீ, மேல்நீராறு-24 மி.மீ, கீழ்நீராறு-120 மி.மீ., காடம்பாறை-8 மி.மீ., சர்க்கார்பதி-20 மி.மீ., மணக்கடவு-15 மி.மீ., தூணக்கடவு-4 மி.மீ., பெருவாரிபள்ளம்-4 மி.மீ., சுல்தான்பேட்டை-59 மி.மீ.

Tags:    

மேலும் செய்திகள்