கூடலூர்- ஓவேலி சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம்
கூடலூர்- ஓவேலி சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கவனமுடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கூடலூர்
கூடலூர்- ஓவேலி சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கவனமுடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டு யானைகள் கூட்டம்
கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இந்த நிலையில் கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் உள்ள கெவிப்பாரா என்ற இடத்தில் காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளது. தொடர்ந்து சாலையை அடிக்கடி கடந்து செல்கிறது.
மேலும் பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக கோக்கால் மலையடிவாரம், கெவிப்பாரா, தருமகிரி, காமராஜ் நகர் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் இரவில் ஊருக்குள் வர வாய்ப்புள்ளது என வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஓவேலி வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
வனத்துறை எச்சரிக்கை
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
கூடலூர்-ஓவேலி சாலையில் எந்த நேரமும் வாகன போக்குவரத்து இருந்து வருகிறது. இதேபோல் பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளுக்காக கூடலூருக்கு வந்து செல்கின்றனர். தற்போது காட்டு யானைகள் கூட்டமாக கெவிப்பாரா பகுதியில் முகாமிட்டுள்ளது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் மிகுந்த விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.
இதேபோல் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கவனமுடன் செல்ல வேண்டும். மேலும் சுற்றுவட்டார கிராம மக்கள் தனியாக நடந்து செல்லக்கூடாது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. குடியிருப்பு பகுதிக்கு காட்டு யானைகள் வந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.