கேரள வனப்பகுதியில் இருந்து வால்பாறைக்கு இடம்பெயரும் காட்டு யானைகள்-எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு உள்ளதால் வனத்துறை எச்சரிக்கை

Update: 2023-08-15 20:00 GMT

வால்பாறை

கேரள வனப்பகுதியில் இருந்து வால்பாறைக்கு இடம்பெயரும் காட்டு யானைகள் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு உள்ளதால் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்கள்.

காட்டு யானைகள் முகாம்

தமிழக கேரள வனப் பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் இடம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றன. இதில் ஆண்டுதோறும் வால்பாறை பகுதியில் மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து கோடை காலம் தொடங்கியதும் காட்டு யானைகள் கூட்டம் கேரள வனப் பகுதிகளுக்கு செல்வதும், ஜூலை மாதம் 2-வது வாரத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு சென்ற காட்டு யானைகள் கூட்டம் மீண்டும் வால்பாறை வனப் பகுதிகளுக்கு வருவதும் வழக்கம். அதன்படி கடந்த வாரத்தில் இருந்து தமிழக கேரள எல்லை வனப் பகுதிகள் வழியாக காட்டு யானைகள் கூட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார வனப் பகுதிகளுக்கு வந்து கொண்டேயிருக்கிறது. இந்த நிலையில் நல்லமுடி எஸ்டேட் பகுதியை ஒட்டிய கேரள வனப் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 2 குட்டிகளுடன் 9 யானைகள் கொண்ட கூட்டம் நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சி முனை வழியாக ஆனைமுடி நல்லமுடி எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டிருந்தது.

வனத்துறை எச்சரிக்கை

இந்த யானைகள் கூட்டம் இரவில் அங்கிருந்து நல்லமுடி எஸ்டேட் பகுதி வழியாக சென்று நேற்று அதிகாலை முதல் முக்கோட்டு முடி எஸ்டேட் தேயிலை தோட்ட பகுதியில் முகாமிட்டு நின்று வருகிறது. குட்டி யானை களைப்படைந்து விட்டதால் படுக்க வைத்து உறங்கும் குட்டி யானைக்கு, யானைகள் பாதுகாப்பாக நின்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் முகாமிட்டு காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து சுற்று வட்டார பகுதியில் உள்ள எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்களை பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

இதேபோல் சோலையாறு எஸ்டேட் சிலுவை மலை பகுதியில் 8 யானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டுள்ளது. மேலும் பல யானைக் கூட்டங்கள் கேரள வனப் பகுதியில் இருந்து வால்பாறை பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறது. இப்போது வந்துள்ள காட்டு யானைகள் கூட்டம் வருகிற மார்ச் மாதம் இறுதி வாரம் வரை வால்பாறை சுற்று வட்டார பகுதியில் உள்ள வனப் பகுதிகளில் முகாமிட்டு உலா வரவிருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்