வீட்டை சூறையாடிய காட்டு யானைகள்
பெரும்பாறை அருகே காட்டு யானைகள் வீட்டை சூறையாடின.
கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான ஆடலூர், சோலைக்காடு, கொக்குப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. அவை அப்பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்தநிலையில் பெரும்பாறை அருகே சோலைக்காட்டை சேர்ந்த விவசாயியான பூதபாண்டி என்பவருக்கு சொந்தமான தோட்டத்துக்குள் காட்டு யானைகள் புகுந்தன. அப்போது அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, காபி, ஆரஞ்சு, பாக்கு மரம் உள்ளிட்டவற்றை தின்று தீர்த்தன. மேலும் மரம், செடிகளை நாசம் செய்தன. பின்னர் அங்கிருந்த தோட்டத்து வீட்டை காட்டு யானைகள் சேதப்படுத்தி சூறையாடின. இதையடுத்து அதிகாலையில் அந்த காட்டு யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன.
இதற்கிடையே பூதபாண்டி நேற்று காலை தனது தோட்டத்திற்கு வந்தபோது, வீடு மற்றும் பயிர்கள் நாசமாகி இருந்ததை பார்த்து வேதனை அடைந்தார். காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே ஆடலூர், சோலைக்காடு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.