வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

வால்பாறை அருகே எஸ்டேட் குடியிருப்புக்குள் காட்டு யானைகள் நுழைந்து வாழை மரங்களை சேதப்படுத்தியது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2022-07-10 16:32 GMT

வால்பாறை, 

வால்பாறை அருகே எஸ்டேட் குடியிருப்புக்குள் காட்டு யானைகள் நுழைந்து வாழை மரங்களை சேதப்படுத்தியது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

காட்டு யானைகள்

வால்பாறை பகுதியில் உள்ள வனப்பகுதிகளுக்கு ேகரளாவில் இருந்து காட்டு யானைகள் இடம்பெயர்ந்து வருவது வழக்கம். தேயிலை எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாடி வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் வால்பாறை அருகே அக்காமலை எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் 3 காட்டு யானைகள் புகுந்தன. அங்கு குடியிருப்பை ஒட்டி பயிரிடப்பட்டு இருந்த வாழை மரங்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது.

அந்த சமயம் எஸ்டேட் பகுதியில் கனமழை காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனால் யானைகள் குடியிருப்புக்குள் நுழைந்தது தொழிலாளர்களுக்கு தெரியவில்லை. வாழை மரங்களை உடைத்த சத்தம் கேட்ட பின்னர் தான் தெரிந்தது. இருப்பினும், மின்சாரம் இல்லாததால் தொழிலாளர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து காட்டு யானைகளை விரட்ட முடியவில்லை.

தொழிலாளர்கள் அச்சம்

இதனால் அவர்கள் விடிய, விடிய விழித்துக் கொண்டு யானைகள் வீட்டை உடைத்து விடுமோ என்ற அச்சத்தில் இருந்தனர். அதிகாலை 5 மணி வரை குடியிருப்பில் முகாமிட்ட யானைகள் அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றது. குடியிருப்புக்குள் நுழைந்த யானைகள் 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தியது. இதனால் வாழை பயிரிட்ட விவசாயிக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் அக்காமலை, கருமலை ஆகிய எஸ்டேட் பகுதிகளில் வனத்துறையினர் யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

தமிழக-கேரள எல்லை பகுதிகளை ஒட்டி எஸ்டேட் பகுதிகளுக்குள் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் எஸ்டேட்டில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். மேலும் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் பணிக்காக வெளியே செல்லும் தொழிலாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்