காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்

பேரணாம்பட்டு அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் நெற்பயிர் மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தின.

Update: 2023-08-09 18:09 GMT

காட்டு யானைகள்

பேரணாம்பட்டு வனசரகம் மோர்தானா காப்புக்காடு, குண்டலப் பல்லி வனப்பகுதியில் ஒரு குட்டி யானையுடன் சுற்றி வரும் 5 காட்டு யானைகள் கடந்த சில நாட்களாக வனப்பகுதியை ஒட்டியுள்ள மா, வாழை, தென்னை தோப்புகள், நெல்வயல் ஆகியவற்றில் புகுந்து அட்டகாசம் செய்து பயிர்களை சூறையாடி வந்தன.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் அரவட்லா மலைப்பகுதிக்குள் காட்டு யானைகள் புகுந்தன. அங்குள்ள கொத்தூர் கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள குமரேசன், ராஜமாணிக்கம், கணபதி ஆகியோருக்கு சொந்தமான நிலத்தில் நெற்பயிர்களை மிதித்து நாசம் செய்தன.

வாழை மரங்கள் சேதம்

கோட்டீஸ்வரி என்பவரது நிலத்தில் வாழை மரங்களை பிடுங்கி துவம்சம் செய்தன. விவசாயிகள் பட்டாசு வெடித்து அருகிலுள்ள காப்புக் காட்டிற்குள் யானைகளை விரட்டினர். இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு வனவர் அண்ணாமலை, கிராம நிர்வாக அலுவலர் தனசேகரன், வனகாப்பாளர்கள் வெங்கடேசன், திருமலைவாசன் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர்.

குண்டலப் பல்லி கிராமத்தை தொடர்ந்து தற்போது அரவட்லா மலை கிராமத்திற்கு காட்டு யானைகளின் கூட்டம் படையெடுத்துள்ளதால் கரும்பு, வாழை, நெல் அதிகளவில் பயிரிட்டுள்ள விவசாயிகள் பீதியில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்