கால்வாயில் காட்டு யானையின் எலும்பு கூடு மீட்பு

டாப்சிலிப் அருகே கால்வாயில் காட்டு யானையின் எலும்பு கூட்டை மீட்டு வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-06 16:17 GMT

பொள்ளாச்சி, 

டாப்சிலிப் அருகே கால்வாயில் காட்டு யானையின் எலும்பு கூட்டை மீட்டு வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யானை எலும்பு கூடு

பரம்பிக்குளம் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தூணக்கடவு அணைக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்கிருந்து கால்வாய் மூலம் சிறிது தூரம் கொண்டு செல்லப்பட்டு, சுரங்கபாதை வழியாக சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்திற்கு தண்ணீர் வருகிறது. இதற்கிடையில் சுரங்கபாதையில் மரத்துண்டுகள் செல்வதை தடுக்க வலை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் அருகே வனத்துறையினர் ரோந்து சென்ற போது, வலையில் காட்டு யானையின் எலும்பு கூடு சிக்கி இருப்பதை பார்த்தனர். தண்ணீர் அதிகமாக சென்றதால் எலும்பு கூட்டை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தூணக்கடவில் இருந்து கால்வாயில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

டி.என்.ஏ. பரிசோதனை

இதை தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில், துணை இயக்குனர் கணேசன் மேற்பார்வையில், வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் வலையில் சிக்கி இருந்த யானையின் எலும்பு கூட்டை கைப்பற்றினர். பின்னர் கால்நடை டாக்டர் விஜயராகவன் எலும்பு கூடுகளை ஆய்வு செய்தார். தந்தம் கிடைக்காததால் ஆண் யானையா? பெண் யானையா? என்று உறுதிப்படுத்த முடியவில்லை.

இதை தொடர்ந்து யானையின் எலும்பு கூடுகள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக வனத்துறை அதிகாரிகள் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். கால்வாயில் தவறி விழுந்த யானை அடித்து வரப்பட்டு இறந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. மேலும் யானையை வேட்டையாடி விட்டு, அதன் உடலை கால்வாயில் வீசி இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் டி.என்.ஏ. பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே முழு விசாரணை நடத்தப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்