சட்டப்பூர்வ திருமணமாக இல்லாவிட்டாலும் பராமரிப்பு தொகை பெற மனைவிக்கு உரிமை உண்டு-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சட்டப்பூர்வமாக திருமணம் செய்யாவிட்டாலும் பராமரிப்பு தொகையை பெற மனைவிக்கு உரிமை உண்டு என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-07-10 20:40 GMT


சட்டப்பூர்வமாக திருமணம் செய்யாவிட்டாலும் பராமரிப்பு தொகையை பெற மனைவிக்கு உரிமை உண்டு என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சீராய்வு மனு

நெல்லை சங்கர்நகரை சேர்ந்த லயோலா செல்வகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த சீராய்வு மனுவில் கூறியிருந்ததாவது:-

எனக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். எனக்கும், என் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடரப்பட்டு, நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஷெரோன்நிஷா என்பவருக்கும், அவரது மகனுக்கும் மாதம் தலா ரூ.10 ஆயிரம் பராமரிப்பு செலவு தொகையாக வழங்க வேண்டும் என கடந்த 2021-ம் ஆண்டில் நெல்லை மாவட்ட குடும்ப நல கோர்ட்டு எனக்கு உத்தரவிட்டுள்ளது. ஷெரோன் நிஷாவுக்கும் எனக்கும் திருமணம் நடக்கவில்லை. அவருடன் எனக்கு தொடர்பு கிடையாது.

நான் மாதம் ரூ.16 ஆயிரம்தான் சம்பளம் பெறுகிறேன். பிடித்தம் போக ரூ.11,500 தான் கிடைக்கும். அதில் முதல் மனைவிக்கும், குழந்தைக்கும் மாதம் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டி உள்ளது.

எனவே ஷெரோன்நிஷா, அவரது மகனுக்கு பராமரிப்புத் தொகை வழங்கும்படி கீழ் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மறுசீராய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

திருமண ஆதாரங்கள்

இந்த வழக்கு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மனுதாரர் தன்னுடைய முதல் மனைவியிடம் இருந்து இன்னும் சட்டப்படி விவாகரத்து பெறவில்லை என்கிறார். இதனால் ஷெரோன் நிஷாவுடன் திருமணம் நடந்திருந்தால், அது சட்டபூர்வமானது ஆகாது.

அதே நேரத்தில் மனுதாரருக்கும், ஷெரோன் நிஷாவுக்கும் திருமணம் நடந்ததற்கான ஆதாரமாக திருமண அழைப்பிதழ், புகைப்படங்கள் உள்ளிட்டவை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்தும் சித்தரிக்கப்பட்டவை என்று மனுதாரர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த திருமண புகைப்படங்கள் சித்தரிக்கப்பட்டவை என்று மனுதாரர் கீழ் கோர்ட்டில் தெரிவிக்கவில்லை. மேலும் அவர், மாதம் ரூ.16 ஆயிரம் சம்பளம் பெறுவதாக கூறியுள்ளார். அதற்கான சான்றிதழை தாக்கல் செய்யவில்லை.

மனைவிக்கு உரிமை

எனவே இவர்களுக்குள் நடந்தது சட்டப்படியான திருமணமாக இல்லாவிட்டாலும், குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 125-ன் கீழ் பராமரிப்பு தொகை பெற மனைவிக்கு உரிமை உண்டு. இதனால் மனுதாரர் சம்பந்தமான கீழ்கோர்ட்டு உத்தரவில் தலையிட முடியாது. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்