கணவரை உயிரோடு மண்எண்ணெய் ஊற்றி எரித்த மனைவி கைது

வேலூர் அருகே கணவரை உயிரோடு மண்எண்ணெய் ஊற்றி எரித்த மனைவி கைது செய்யப்பட்டார். தீக்காயம் அடைந்த அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-05-15 18:26 GMT

கட்டிட மேஸ்திரி

வேலூரை அடுத்த இலவம்பாடி கிராமம் கருநிகர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி லதா (29). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சுரேசுக்கு குடிப்பழக்கம் இருந்ததாலும் வீட்டில் சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது லதா, சுரேஷை திட்டி தாக்கியதாக தெரிகிறது. மேலும் லதா வீட்டில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து சுரேஷ் மீது ஊற்றினார். பின்னர் கண்இமைக்கும் நேரத்தில் தீப்பெட்டியை எடுத்து தீ பற்ற வைத்தார். தீ உடல் முழுவதும் பரவியதால் சுரேஷ் வலியில் அலறி துடித்தார். அவரது சத்தம்கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 90 சதவீதம் தீக்காயம் அடைந்த அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கைது

இந்த சம்பவம் குறித்து விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சுரேஷிடம் வாக்குமூலம் பெற்றனர். பின்னர் லதாவை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்