தமிழகத்தில் பரவலாக மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

Update: 2022-08-04 18:53 GMT

சென்னை,

தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் குற்றாலம் மெயின் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதுகாப்பு வளைவை தாண்டி உள்ள பாலத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இதேபோல் ஐந்தருவியில் 5 கிளைகளும் தெரியாத அளவுக்கு தண்ணீர் கொட்டியது. இதனால் 4-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் குறுவை அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய, விடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று பகலில் விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. அடுக்கம் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக 3 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. தேனி மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் இருந்தே பல இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

குமரி மாவட்டத்தில் பெய்த மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் காலை 11 மணி முதல் மாலை வரை பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கோவை வால்பாறையில் விடிய, விடிய கன மழை கொட்டித்தீர்த்தது. இதனால் 2 இடங்களில் மண்சரிவு- வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததையடுத்து உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட்டது.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கனமழையாக கொட்டியது. ஏற்காட்டில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாகலூர் கிராமத்தில் மரப்பாலம் என்ற பகுதியில் சிறிய ஓடை ஒன்று உள்ளது. இந்த ஓடைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

பஞ்சலிங்க அருவியில்...

தமிழக ஆந்திர எல்லை பகுதிகளில் பெய்த கனமழையால் காட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் திருப்பத்தூர் மாவட்டம் அரங்கல்துருகம் பகுதியிலிருந்து கதவாளம் பகுதிக்கு செல்லும் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மிகுந்த ஆபத்தான நிலையில் சாலையை கடந்து சென்றனர்.

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்திமலையில் பலத்த மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அமணலிங்கேஸ்வரர் கோவிலை தண்ணீர் சூழ்ந்தது. வேலூர் மாவட்டத்தில் நேற்றும் மழை வெளுத்து வாங்கியது. மக்கானில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்தது. இதேபோல தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்