நெல்லையில் பரவலாக மழை: மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பலத்த மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி அமைந்துள்ள பணகுடி, சேரன்மாதேவி, பாபநாசம், அம்பை, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. அணை பகுதிகளிலும் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நேற்று முன்தினம் காலை வரை வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று 1,321 கன அடியாக அதிகரித்தது. 1,041 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று முன்தினம் 86 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று ஒரு அடி உயர்ந்து 87 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 97.44 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 71.45 அடியாகவும் உள்ளது.
மணிமுத்தாறு அருவி
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து போன்ற தேயிலைத்தோட்ட பகுதிகளில் பெய்த கனமழையினால் மணிமுத்தாறு அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அவர்கள் அருவியை பார்வையிட மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
களக்காடு தலையணை
களக்காடு தலையணையில் நேற்று காலை தண்ணீர் வரத்து அதிகரித்தது. தடுப்பணையை மூழ்கடித்தப்படி வெள்ளம் சீறிப்பாய்ந்து சென்றது. இதனைதொடர்ந்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில் தலையணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
வனச்சரகர் பிரபாகரன் தலைமையில் வனத்துறை ஊழியர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா பயணிகள் தலையணையை சுற்றி பார்க்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.