விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் பரவலாக பெய்த மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் கோடை வெயிலின் கோரத் தாண்டவத்துக்கு சற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக இன்னும் சில நாட்கள் இந்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. கத்திரி வெயில் காலம் முடிந்த பின்னரும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. இதனிடையே வெப்பச்சலனம் காரணமாக கடந்த ஒரு வார காலமாக பகலில் வெயில் சுட்டெரிப்பதும், மாலை, இரவு வேளையில் மழை பெய்வதுமாக இருந்து வருகிறது.
பரவலாக மழை
இந்நிலையில் வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் காலையில் இருந்து இரவு வரை விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. நள்ளிரவிலும் இந்த மழை நீடித்தது. விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம், கோட்டக்குப்பம், விக்கிரவாண்டி, முகையூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழையும், வானூர், செஞ்சி, மேல்மலையனூர், திருவெண்ணெய்நல்லூர் உள்ளிட்ட சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்தது.
இதனால் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த மழையினால் கோடை வெப்பம் தணிந்து இரவில் இதமான குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பலரது வீடுகளில் ஏ.சி., மின்விசிறி பயன்பாடின்றி பொதுமக்கள் தூங்கினர்.
பொதுமக்கள் மகிழ்ச்சி
தொடர்ந்து, நேற்றும் காலை வேளையில் மாவட்டத்தின் பல இடங்களில் சாரல் மழை பெய்தது. மழையின் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என மாணவ- மாணவிகள் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் பலத்த மழை பெய்யாததால் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த மாணவ- மாணவிகள் குடைபிடித்தபடி பள்ளி- கல்லூரிகளுக்கு சென்றதை காண முடிந்தது.
இதேபோல் மாலை வேளையிலும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மழை அளவு
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
மரக்காணம்- 35
திண்டிவனம்- 32
விழுப்புரம்- 23
முகையூர்- 23
முண்டியம்பாக்கம்- 22.50
கோலியனூர்- 22
சூரப்பட்டு- 20
அனந்தபுரம்- 20
நேமூர்- 19
கெடார்- 18.40
கஞ்சனூர்- 17
செஞ்சி- 16
வானூர்- 15.50
வல்லம்- 15
மணம்பூண்டி- 11
வளவனூர்- 10.40
வளத்தி- 9.80
அவலூர்பேட்டை- 8
செம்மேடு- 6.20
திருவெண்ணெய்நல்லூர்- 5
அரசூர்- 4