நள்ளிரவில் பரவலாக மழை
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது. மரக்காணத்தில் அதிகபட்சமாக 67 மி.மீ. பதிவானது
விழுப்புரம்
பலத்த மழை
வடதமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது.
விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான கோலியனூர், காணை, வளவனூர், பெரும்பாக்கம், தோகைப்பாடி, கல்பட்டு, சிந்தாமணி, அய்யூர்அகரம், கப்பியாம்புலியூர், குச்சிப்பாளையம், பிடாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து பரவலாக மழை பெய்தது. மீண்டும் நள்ளிரவு 12 மணி முதல் லேசான சாரல் மழை பெய்தது. அடுத்த சில நிமிடங்களில் இடி- மின்னலுடன் கூடிய பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது.
தாழ்வான பகுதியில் தேங்கிய தண்ணீர்
இந்த மழை இடைவிடாமல் 1 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கியது. அதன் பிறகு சிறிது நேரம் மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் அதிகாலை 5 மணி வரை விட்டு விட்டு தூறிக்கொண்டே இருந்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
பலத்த மழையினால் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தேங்கி நின்ற மழைநீரை நகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று மின்மோட்டார் மூலம் வெளியேற்றினர். இதேபோல் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நின்ற தண்ணீரும் வெளியேற்றப்பட்டது. மேலும் பலத்த மழையின் காரணமாக சில கிராமப்புறங்களில் நள்ளிரவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இதேபோல் விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம், மரக்காணம், வானூர், கோட்டக்குப்பம் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மரக்காணத்தில் 67 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த மழையினால் ஏரிகள், குளங்களுக்கு நீர்வரத்து வரத்தொடங்கியுள்ளதால் விவசாயிகள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மழை அளவு
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
மரக்காணம்..............................67
வானூர்......................................55
வளத்தி........................................37
திண்டிவனம்............................32
முண்டியம்பாக்கம்...........30.50
செஞ்சி........................................25
அவலூர்பேட்டை............19.60
விழுப்புரம்..................................17
கெடார்.......................................16
வல்லம்........................................16
கஞ்சனூர்...................................15
செம்மேடு..............................14.50
கோலியனூர்.............................12
வளவனூர்..................................12
நேமூர்...........................................12
சூரப்பட்டு.................................12
அனந்தபுரம்...............................11
மணம்பூண்டி.............................9
முகையூர்.......................................9
அரசூர்..........................................3