ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்சை கடத்தியது ஏன்?;கைதான டிரைவர் பரபரப்பு தகவல்

நாகர்கோவிலில் ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்சை கடத்தியது ஏன்? என்பது குறித்து கைதான டிரைவர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

Update: 2022-06-14 20:55 GMT

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்சை கடத்தியது ஏன்? என்பது குறித்து கைதான டிரைவர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆம்புலன்ஸ் கடத்தல்

நாகர்கோவில் மேல ஆசாரிபள்ளத்தைச் சேர்ந்தவர் ராமன் (வயது 49). தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு ஆம்புலன்சை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி வாயில் அருகே நிறுத்தி வைத்து விட்டு வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. மறுநாள் காலை வந்து பார்த்தபோது ஆம்புலன்சை காணவில்லை. இதுகுறித்து ராமன் ஆசாரிபள்ளம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் ஒருவர் ஆம்புலன்சை கடத்திச் செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் மேலபுத்தளத்தைச் சேர்ந்த சுரேஷ் (25) என்பவரை கைது செய்து ஆம்புலன்சை மீட்டனர். கைதான சுரேஷ் டிரைவர் ஆவார்.

ஆம்புலன்சை கடத்தியது ஏன்? என்பது குறித்து போலீசார் சுரேஷிடம் விசாரித்தபோது வெளியான தகவல்கள் வருமாறு:-

சிகிச்சை பெற வந்தவர்

சம்பவத்தன்று இரவு சுரேஷ் மதுபோதையில் கையில் பலத்த காயத்துடன் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு காயத்துக்கு மருந்து வைத்து கட்டி சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் தான் வீட்டுக்கு செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்து தருமாறு மருத்துவமனை ஊழியர்களிடம் அவர் கேட்டுள்ளார். அதற்கு திடகாத்திரமாக இருக்கும் உங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதியெல்லாம் செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார்கள்.

இதனால் ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்த அவர், வாயில் அருகில் ராமன் நிறுத்தியிருந்த ஆம்புலன்சை பார்த்துள்ளார். அந்த ஆம்புலன்சை திறந்து வெள்ளிச்சந்தை வழியாக ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஆம்புலன்சை நிறுத்தி டீசல் நிரப்பியுள்ளார். அதற்கு தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த கார்டில் பணம் இல்லை என்பது தெரிய வந்தது. இதனால் கார்டை அந்த பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கொடுத்து, பணத்தை தந்துவிட்டு கார்டை வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி ஆம்புலன்சை எடுத்துச் சென்றுள்ளார்.

பஞ்சரான டயருடன் ஓட்டினார்

மீண்டும் அவர் ஆசாரிபள்ளம் வழியாக ஆம்புலன்சை ஓட்டி வந்தபோது போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் தன்னை பிடித்து விடுவார்களோ என்று பயந்த சுரேஷ், மீண்டும் வெள்ளிச்சந்தை வழியாக ராஜாக்கமங்கலம், ஈத்தாமொழி, புத்தளம் சென்றுள்ளார். இடையில் டயர் பஞ்சராகி உள்ளது. இருந்தாலும் காற்று இல்லாத சக்கரத்தோடு ஓட்டிச்சென்றிருக்கிறார். வீட்டுக்குச் சென்ற அவர், போலீசார் வீட்டுக்கு வந்து விடுவார்களோ? என்று பயந்து மீண்டும் ஆம்புலன்சை ஈத்தாமொழி போலீஸ் நிலையம் அருகே நிறுத்தி வைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.

வெள்ளிச்சந்தை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சுரேசை கைது செய்து ஆம்புலன்சை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்