இன்று இளைஞர்கள் ஏன் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்?
இன்று உணர்கிறார்கள். உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும் அவசியம் என்கிறார்கள். ஆனால் அதை அனைவரும் கடைப் பிடிக்கிறார்களா? இளைஞர்கள் என்ன செய்கிறார்கள்? என்பது பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை காண்போம்.
நாம் அணியும் தானியங்கி கைக்கடிகாரம் தானாக இயங்கினாலும், அதன் தொடர் இயக்கத்திற்கு ஓர் இயக்கு விசை வேண்டும். நமது உடல் அசைவில் இருந்து அந்த விசையை அது எடுத்துக்கொள்கிறது. இல்லை என்றால் அது இயங்காமல் நின்றுவிடும். நமது உடலும் அப்படித்தான். அதற்கு விசை தேவைப்படுகிறது. அதற்குத்தான் உடற்பயிற்சி.
தாத்தா உடற்பயிற்சி செய்தாரா?
அப்படி என்றால் நம்முடைய தாத்தா, பாட்டிகள் காலத்தில் 'ஜிம்' இருந்ததா? அவர்கள் உடற்பயிற்சிகள் செய்தார்களா என்ற கேள்விகள் எழலாம். அதற்கு இல்லை என்றே பதிலும் சொல்லிவிடலாம்.
ஆனால் அப்போது பாசுமதி அரிசியும், பாலும் பாக்கெட்டுகளில் கிடைக்கவில்லை என்பதை நாம் உணர வேண்டும்.
அவர்கள் அன்றாட வாழ்க்கையில் உடல் உழைப்பு ஓர் அங்கமாக இருந்தது.
தாத்தா நிலம் உழுதார். நெல் விளைவித்தார். பசு வளர்த்தார். பால் கறந்தார். தினதினம் தேவைக்கு நெடுந்தூரம் நடந்தார். பாட்டி நெல் குத்தினார். ஆட்டு உரல், அம்மிக்கல் அரைத்தார். நீர் இறைத்தார்.
இன்று நமது வாழ்க்கை முறை தலைகீழாக மாறிவிட்டதே! தொழில்நுட்பம் வளரவளர, எந்திரங்களும் பெருக பெருக உடல் உழைப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டோம். அடுத்த தெருவில் இருக்கும் கடையில் மெழுகுவர்த்தி வாங்குவதற்குக்கூட நமது பையன் மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்கிறான்.
மன அழுத்தம்
நாமோ இருந்த இடத்தில் இருந்து கொண்டே அத்தனை வேலைப்பளுவையும் மூளையில் அள்ளிக்கொட்டிக்கொள்கிறோம். இதனால் மன அழுத்தம். புதுப்புது நோய்களும் நம்மை தொற்றிக்கொள்கின்றன.
ஒரு காலத்தில் சர்க்கரை நோயை பணக்கார நோய் என்று பெருமையாக கிராமங்களில் பேசுவார்கள். பணம் வைத்திருப்பவர்களுக்கு உடல் உழைப்பு குறைந்து விட்டதால் அந்த நோய் வந்ததை அவர்கள் அறியவில்லை. இன்று உணர்கிறார்கள். உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும் அவசியம் என்கிறார்கள். ஆனால் அதை அனைவரும் கடைப் பிடிக்கிறார்களா? இளைஞர்கள் என்ன செய்கிறார்கள்? என்பது பற்றி இவர்கள் கீழே என்ன சொல்கிறார்கள் என்பதை காண்போம்.
நோயற்ற வாழ்வு
திண்டுக்கல்லை சேர்ந்த அரசு மருத்துவர் செந்தில்குமார்:- நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். இதற்காக தரமான உணவை சாப்பிடுவது போன்று, ஒவ்வொரு மனிதனும் தினமும் 40 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதோடு சேர்த்து நடைப்பயிற்சியும் செய்யலாம். இதனை காலை நேரத்தில் மேற்கொள்வது மிகவும் நல்ல பலனை தருகிறது. இன்மூலம் உடல் உறுதியாவதோடு, ரத்த ஓட்டம் சீராகும். தினமும் சீராக நடைப்பயிற்சி மேற்கொள்வதால் மனஅழுத்தம் வெகுவாக குறையும். இதனால் சர்க்கரை நோய், இருதய நோய் வருவது தடுக்கப்படுகிறது. இன்றைய காலத்தில் முக்கிய குறையாக இருக்கும் உடல்பருமனை குறைக்க உடற்பயிற்சி அவசியம். அதேநேரம் 40 வயதுக்கு மேல் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் வந்த பின்னர் நடைபயிற்சி சென்றால் போதும் என நினைப்பது தவறு. சிறுவர், சிறுமிகளை தினமும் நடைப்பயிற்சி அல்லது விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும்.
திண்டுக்கல் உடற்பயிற்சி கூட பயிற்சியாளர் ஜான்வில்லியம் லாரன்ஸ்:- இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் 50 கிலோ எடையில் தான் இருக்கின்றனர். பண்டைய காலம் போன்று வீட்டில் ஆண்களுக்கு வேலை இல்லை. செல்போனில் நீண்டநேரம் விளையாடுதல், துரித உணவுகளை சாப்பிடுதல் ஆகிவற்றால் உடல் வலிமையாக இல்லை. இதனால் எளிதில் நோய் தொற்று ஏற்படுவதை தடுக்க உடற்பயிற்சி அவசியம். கொரோனா காலத்துக்கு பின்னர் இளைஞர்களிடம் உடற்பயிற்சி ஆர்வம் அதிகரித்து இருக்கிறது. ஆனால் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் நடைபயிற்சி மட்டும் செய்தால் போதும் என நினைக்கின்றனர். நடைப்பயிற்சி செய்வதால் இருதய பிரச்சினை வராது. அதேநேரம் உடலில் அனைத்து தசைகளும் உறுதியாக உடற்பயிற்சி அவசியம். எனவே நடைப்பயிற்சியோடு, உடற்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும்.
உடல்நலனில் அக்கறை
பழனியை சேர்ந்த டெய்லர் நடராஜன் :- உடல் நலமாக இருந்தால் தான் அனைத்தையும் பெற முடியும். என்னுடைய இளவயதில் உடல் உழைப்பு வேலை அதிகமாக இருந்தது. அப்போது கிராமங்களில் கிணற்றில் நீச்சல் அடித்து குளித்தல், கபடி விளையாடுதல் என உடலை வலுவாக்கும் விளையாட்டுகள் அதிகம் இருந்தன. தற்போது நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களில் கூட இளைஞர்கள் செல்போனிலேயே மூழ்கி கிடக்கின்றனர். ஆன்லைன் விளையாட்டுகளில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் சிறு வயதிலேயே கண்ணாடி அணியும் பழக்கம் வருவதோடு, உடல் மற்றும் மன அளவில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே இளைஞர்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்தி உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும்.
நேரம் இல்லை
நத்தம் கோவில்பட்டியை சேர்ந்த என்ஜினீரியங் ராஜாமணி:- உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்வது உடலுக்கு மிகவும் நல்லது தான். ஆனால் காலையில் எழுந்து கல்லூரிக்கு புறப்பட்டு செல்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது. கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்தால் பாடங்களை படிப்பது, தோழிகளுடன் பாடம் தொடர்பாக உரையாடுதல் ஆகியவற்றுக்கே நேரம் சரியாக இருக்கிறது. இதனால் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் கிடைப்பதில்லை. அதேநேரம் உடற்பயிற்சி செய்வதற்கும் ஆசையாக இருக்கிறது.
நல்லாம்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் பிரதீப்:- உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மிகவும் நல்லது என்பது தெரியும். இதனால் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வதற்கு மிகவும் ஆவலாக இருக்கும். ஆனால் கல்லூரிக்கு புறப்பட்டு செல்வதற்கே நேரம் சரியாக இருப்பதால் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை. அதேநேரம் நண்பர்களுடன் சேர்ந்து ஓய்வு நேரத்தில் விளையாடுவேன். விளையாடுவதால் உடலும், மனமும் உறுதியாகிறது. அதேபோல் உடற்பயிற்சி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும். எனவே தினமும் உடற்பயிற்சி செய்வதற்கு திட்டமிட்டு இருக்கிறேன்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.