முப்போகம் விளைந்த பூமி ஒருபோகத்துக்கே தள்ளாடுவது ஏன்?: தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் கருத்து

முப்போகம் விளைந்த பூமி ஒருபோகத்துக்கே தள்ளாடுவது ஏன்? என்று தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2022-11-09 18:45 GMT

முப்போகம் விளைந்த பூமி தற்போது ஒரு போகத்துக்கே தள்ளாடுவது ஏன்? என்பது பற்றி தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.

வற்றாத ஜீவநதி

தூத்துக்குடி மாவட்டத்தில் வடக்கே மானாவாரியும், தெற்கே வளமான ஆற்றுப்பாசனத்துடனும் விவசாயம் நடந்து வருகிறது. மாவட்டத்தில் தெற்கே வற்றாத ஜீவநதியான தாமிரபரணியும், வடக்கே வைப்பாறும் ஓடுகிறது. தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தில் நன்செய் விவசாயம் சிறப்பாக நடைபெற்று வந்தது.

தாமிரபரணி ஆற்றில் மருதூர் அணைக்கட்டில் இருந்து மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து வடகால், தென்கால் ஆகிய 4 கால்வாய்கள் உள்ளன. இந்த கால்வாய்களின் மொத்த நீளம் 78 கிலோ மீட்டர் ஆகும். கால்வாய்கள் மூலம் நேரடியாக 53 குளங்கள் நிரப்பப்படுகின்றன. மாவட்டத்தில் மொத்தம் 651 குளங்கள் உள்ளன. அதே போன்று 22 ஆயிரத்து 549 கிணறுகள், ஆழ்துளை கிணறுகளும் விவசாயத்துக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நெல் சாகுபடி

இதனால் மாவட்டத்தில் நெல் பயிர்கள் வழக்கமாக 14 ஆயிரத்து 386 எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்படும். கடந்த ஆண்டு 19 ஆயிரத்து 477 எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு 16 ஆயிரம் எக்டேர் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த 4-ந் தேதி முதல் பிசான சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் விவசாயிகள் நெல் சாகுபடியை தொடங்கி விட்டனர்.

இந்த சூழ்நிலையில் வயல்களுக்கு சீராக தண்ணீர் பாய்ந்து செல்வதற்கும், வயல்களில் இருந்து தண்ணீர் வடிந்து செல்லவும் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கால்வாய்கள் அனைத்தும் முறையாக தூர்வாரப்பட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த காலங்களில் விவசாயிகள் ஒப்படி சங்கம் மூலம் வயல்களுக்கு நடுவே செல்லும் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டன. தற்போது அந்த முறை பல இடங்களில் காணாமல் போய் இருக்கிறது. இதனால் அரசே நிதி ஒதுக்கி அனைத்து கால்வாய்களையும் தூர்வார வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் முன்பு முப்போகம் விளைந்த பூமி இப்போது ஒரு போகத்துக்கே தள்ளாடி கொண்டிருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

கஸ்பா குளம்

ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த விவசாயி முத்துராமலிங்கம்:- ஸ்ரீவைகுண்டம் பகுதி விவசாய பாசனத்தில் ஸ்ரீவைகுண்டம் கஸ்பா குளம் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இந்த குளம் பெருங்குளம் மேற்கு பகுதியிலும், ஸ்ரீவைகுண்டத்துக்கு வடக்கு பகுதியிலும் கடல் போல காட்சி அளிக்கிறது. குளத்தின் மூலம் 1000-க்கும் மேற்பட்ட பாசன விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இந்த விவசாய பகுதிகளில் வாழை, நெல் போன்றவை சாகுபடி செய்து வருகிறோம். இந்த குளத்தில் இருந்து பெறும் தண்ணீர் மூலம் நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். விவசாயிகள் மாடுகளுக்கு தீவனப் பயிர்களும் பயிரிட்டு வருகின்றனர்.

இந்த குளத்தில் 16-க்கும் மேற்பட்ட மடைகள் உள்ளன. இதில் பல மடைகள் சேதம் அடைந்து உள்ளன. இதனால் தண்ணீரை சேமிக்க முடியவில்லை. ஒருகாலத்தில் முப்போகம் விளைந்த பகுதி ஒருபோகமாக மாறிவிட்டது. இந்த குளத்தின் மடைகளை சீரமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்ததால் கடந்த ஆண்டு ஒரு சில மடைகள் மட்டும் சீரமைக்கப்பட்டன. கால்வாயில் தடுப்பு சுவர் அமைக்கும் பணியும் நடந்தது. ஆனால், அந்த பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் வயல்களுக்கு சீராக தண்ணீர் செல்வதில் சிரமம் உள்ளது.

தடுப்பு சுவர்

ஸ்ரீவைகுண்டம் கஸ்பா குளத்தில் இருந்து பேரூர், பராக்கிரமபாண்டி, குலசேகரநத்தம், வரதராஜபுரம், ஆழ்வார்தோப்பு, நளராஜபுரம், திருப்புளியங்குடி மேற்கு பகுதி ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் செல்லும் புதுமடை கால்வாயை சீரமைத்து தர வேண்டும்.

இந்த கால்வாயில் நடைபெறும் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டதால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்வதில் சிரமங்கள் உள்ளன. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பணிகளை விரைந்து முடித்து எங்களை பாதுகாக்க வேண்டும்.

கோடை விவசாயம்

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்துரைச்சாமிபுரத்தை சேர்ந்த விவசாயி சந்திரசேகர்:- ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நாராயணபுரம், பேட்துரைச்சாமிபுரம், களங்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஸ்ரீவைகுண்டம் கஸ்பாகுளத்தில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீர் சீராக எங்கள் வயல்களுக்கு வரும் வகையில் அனைத்து கால்வாய்களையும் சீரமைக்க வேண்டும்.

கால்வாய்கள் தூர்வாரப்பட்டால், தண்ணீர் வீணாக செல்லாமல் விரைவாக வயல்களுக்கு வந்து சேரும். இதனால் குறைந்த தண்ணீரில் விவசாயம் செய்ய முடியும். அதன்மூலம் தண்ணீரை சேமித்து வைத்து கோடையிலும் விவசாயம் செய்யலாம். தற்போது ஆங்காங்கே கால்வாய்களில் தடைகள் இருக்கின்றன. இதனை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முப்போகம்

குரும்பூரை சேர்ந்த விவசாயி தமிழ்மணி:- இந்த ஆண்டு விவசாய பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. விவசாய பணிகளுக்கு வசதியாக ஏற்கனவே தனியார் பங்களிப்புடன் சில கால்வாய்கள் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டன. அதே நேரத்தில் மருதூர் கீழக்கால் சீரமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டும் பணி தொடங்கப்படவில்லை. வயல்களுக்கு இடையே செல்லும் வடிகால்கள், முன்பு ஒப்படி சங்கங்கள் மூலம் சீரமைக்கப்பட்டு வந்தன. இடையில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் கால்வாய்கள் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டன. அதன்பிறகு அந்த பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

விவசாயத்துக்கு தனி பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய திட்டங்களுக்கு எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கால்வாய்கள் தூர்வாரப்பட வேண்டும். முன்பு வேளாண்மை துறை மூலம் கால்வாய்களின் கரை காங்கிரீட்டால் அமைக்கப்பட்டது. தற்போது அந்த திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. முறையாக தண்ணீர் வீணாகாமல் சேமித்து வைத்து பயன்படுத்தியதாலும், கால்வாய்கள் தூர்வாரப்பட்டதாலும் போதுமான தண்ணீர் கிடைத்தது. இதனால் முப்போகம் விளைந்தது. தற்போது இந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டதாலும், தாமிரபரணி ஆற்றில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதாலும், முப்போகம் விளைந்த பூமியில் ஒருபோகம் மட்டுமே விளைகிறது.

இவ்வாறு கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்