சிவபெருமானை பித்தன் என்று ஏன் அழைக்கிறோம்? சென்னை ஐகோர்ட்டு நீதிபதி விளக்கம்

சிவபெருமானை பித்தன் என்று ஏன் அழைக்கிறோம்? என்பது குறித்து கிருபானந்த வாரியார் சொன்னதை மேற்கோள் காட்டி சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விளக்கம் அளித்தார்.

Update: 2023-04-16 21:00 GMT

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் மூத்த நீதிபதியாக இருப்பவர் ஆர். மகாதேவன். இவரது தந்தை மா.அரங்கநாதன் தமிழறிஞர் ஆவார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 16-ந்தேதி அன்று மரணம் அடைந்தார். இவரது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16-ந்தேதி (நேற்று) தமிழ் அறிஞர்களுக்கு மா.அரங்கநாதன் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான விருதுக்கு பேராசிரியர் க.பஞ்சாங்கம், எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணாசாலையில் உள்ள ராணி சீதை அரங்கத்தில் நேற்று மாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி விருதுகளை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் வழங்கினார்.

பின்னர், மா.அரங்கநாதனின் சிறுகதைகளை ஒரே தொகுப்பாக, 'மூன்றில்' என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட புத்தகத்தை நீதிபதி ஆர்.மகாதேவன் வெளியிட்டார்.

விழாவில் மூத்த நீதிபதி ஆர்.மகாதேவன் பேசும்போது, 'ராமலிங்க அடிகளார் பாடிய இன்று வருமோ... என்ற பாடலின் அடிப்படையில் என் தந்தையார் சித்தர் போல் இலக்கிய சமூக பணிகளுக்காக உழைத்து மறைந்தார்.' என்றார்.

நீதிபதி பேச்சு

நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பேசியதாவது:-

சிவபெருமானை பித்தன் என்றும் அழைக்கிறோம். அவரை சுந்தரர் பித்தன் என்றே பாடி உள்ளார். பொதுவாக பித்தன் என்றால் பித்து பிடித்தவன், புத்தி சுவாதீனம் இல்லாதவன் என்று தான் நாம் சொல்வோம். ஆனால் கிருபானந்த வாரியார் 'பித்து' என்றால் குற்றம் செய்த மகனை மன்னிப்பது என்கிறார்.

எனவே சிவபெருமான் தவறு செய்யும் தன் பக்தர்களை மன்னித்து அருளுவதால் அவரை பித்தன் என்று அழைக்கிறோம். நீதிபதி மகாதேவனை பல ஆண்டுகளாக எனக்கு தெரியும். யாரிடமும் கோபம் கொண்டு பேச மாட்டார். கோபம் வந்தாலும் அதனை புன்முருவல் மூலம் கரைத்து விடுவார். இவரது தந்தை மா.அரங்கநாதன் 1950-ம் ஆண்டுகளிலேயே சிறுகதைகளை எழுத தொடங்கி விட்டார்.

இவர் எழுதிய ஒரு சிறுகதையில், தேவாலயத்தில் முத்துக்கருப்பன் என்பவர் ஏசுநாதரை வணங்குகிறார். அவரிடம் பாதிரியார் விசாரித்த போது சுசீந்திரத்தில் உள்ள தாணுமலையானை வணங்கும் போது ஏசுநாதர் தெரிந்தார். அதனால் இங்கு வந்தேன் என்றார். உடனே பாதிரியார் இனிமேல் நீ ஏசுநாதரை மட்டுமே வணங்க வேண்டும் என்று கூறுகிறார்.

அதற்கு முத்துக்கருப்பன், இந்த தேவாலயத்தில் ஏசுநாதரை கும்பிடும்போது எனக்கு சுசீந்திரத்தில் உள்ள தாணுமலையான் தெரிகிறார் என்று சொல்லி சிறுகதையை முடிக்கிறார். இது தமிழர்களின் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற தத்துவத்தையும், யாதும் ஊரே... யாவரும் கேளீர்... என்ற தத்துவத்தையும் எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது. இதுபோல பல சிறுகதைகளை மா.அரங்கநாதன் எழுதி உள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

நீதிபதிகள் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு தலைமை செயலாளர் வெ.இறையன்பு, சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், டி.கிருஷ்ணகுமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, எம்.தண்டபாணி, பி.டி.ஆதிகேசவலு, சி.சரவணன், டி.பரதசக்ரவத்தி, ஜெ.சத்திய நாராயண பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை அகர முதல்வன் வரவேற்றார். ஜி.ஆர்.தேவராஜன் நன்றியுரை ஆற்றினார்.

Tags:    

மேலும் செய்திகள்