பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டது ஏன்?

நாகர்கோவிலில் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது தொடர்பாக உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2023-05-31 18:45 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது தொடர்பாக உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.

பள்ளி மாணவன்

நாகர்கோவில் மேலராமன்புதூர் எம்.ஜி.ஆர். சிலை பகுதியை சேர்ந்தவா் ஸ்டீபன். வெல்டிங் தொழிலாளி. இவருடைய மனைவி ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஸ்டெபின் (வயது 13) அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 8-ம் வகுப்பு செல்ல தயாராக இருந்தான்.

நேற்றுமுன்தினம் மாணவனின் பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் ஸ்டெபினும், அவரது தம்பியும் தனியாக இருந்தனர். மாலையில் இருவரும் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தனர். பின்னர் வீட்டுக்குள் சென்ற ஸ்டெபின், கதவை உள்புறமாக பூட்டிக் கொண்டான்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதற்கிடையே வேலைக்கு சென்ற ஸ்டீபன் இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது தனது 2-வது மகனிடம் அண்ணன் எங்கே? என கேட்டுள்ளார். அதற்கு கதவை உட்புறமாக பூட்டி விட்டு வீட்டுக்குள் அண்ணன் இருக்கிறான் என கூறியுள்ளான். இதனால் சந்தேகமடைந்த ஸ்டீபன் பல முறை கதவை தட்டியும் வீட்டின் உள்ளே இருந்து எந்த சத்தமும் வரவில்லை.

இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, வீட்டுக்குள் இருந்த கழிவறையில் ஸ்டெபின் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்டீபன் கதறி அழுதார். மேலும் இதுபற்றி தகவல் அறிந்த நேசமணி நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பாிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விடுதியில் தங்க விருப்பமில்லை

இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், மாணவன் தற்கொலைக்கான உருக்கமான காரணம் வெளியாகி உள்ளது. அதாவது, ஸ்டெபின் தற்போது வீட்டில் இருந்தபடி பள்ளிக்கு சென்று படித்து வந்தான். பள்ளிக்கூடம் வருகிற 7-ந் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், அவனை விடுதியில் சேர்த்து படிக்க வைக்க பெற்றோர் திட்டமிட்டனர்.

ஆனால் ஸ்டெபினுக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லை. இதனால் மனமுடைந்த ஸ்டெபின் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லாததால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெற்றோா் மற்றும் உறவினா்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்