அதிக அளவில் உபரி நிலங்கள் இருக்கும் நிலையில் நீர்நிலைகளில் அரசு கட்டிடங்களை கட்டுவது ஏன்? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி

அதிக அளவில் உபரி நிலங்களை வைத்திருக்கும்போது நீர்நிலைகளை ஆக்கிரமித்து அரசு கட்டிடங்களை கட்டுவது ஏன்? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

Update: 2023-03-30 20:21 GMT


அதிக அளவில் உபரி நிலங்களை வைத்திருக்கும்போது நீர்நிலைகளை ஆக்கிரமித்து அரசு கட்டிடங்களை கட்டுவது ஏன்? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

விவசாயிகளுக்கு பட்டா

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கங்கா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், விவசாய கூலி வேலை செய்து பிழைக்கிறேன். நெல்லை மாவட்டம் புதுக்குளம் கிராமத்தில் விவசாய பயன்பாடுக்காக எனக்கு நிலம் ஒதுக்கித்தரக்கோரி வருவாய் நிலச்சீர்திருத்த அலுவலரிடம் விண்ணப்பித்தேன். என் மனு நிராகரிக்கப்பட்டது. அதை ரத்து செய்து, எனக்கு நிலம் ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

கடந்த 2006-ம் ஆண்டில் வருவாய்த்துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கையின்படி 3.8.2006 அன்றைய நிலவரப்படி 1,91,320 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. அதில் 69,217 ஏக்கர் நிலங்கள் 98 ஆயிரம் விவசாயிகளின் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. புறம்போக்கு நிலங்களை பயன்படுத்த 4.25 லட்சம் சிறு விவசாயிகளுக்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இத்தனை லட்சம் விவசாயிகளுக்கு பட்டா வழங்க முடியும் எனில், மனுதாரருக்கும் சிறிய நிலத்தை வழங்க ஏன் பரிசீலிக்க முடியாது. அரசு நலத்திட்டங்களுக்காகவும், தொழில்மயமாக்கல் நோக்கத்திற்காகவும் நிலங்களை ஒதுக்குவதில் அரசு மிகவும் சிரமப்பட்டு வருகிறது.

நீர்நிலைகளில் அரசு கட்டிடங்கள்

அரசாங்கத்திடம் இவ்வளவு நிலங்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கும்போது, அத்தகைய நிலங்களை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். அதிக அளவில் உபரி நிலங்களை அரசு வைத்திருக்கும் போது, நீர்நிலைகளில் அரசு கட்டிடங்கள் எப்படி கட்டப்பட்டன என்பது தெரியவில்லை.

பெரும்பாலான கிராமங்களில், கிராம நிர்வாக அலுவலகம், இ-சேைவ மையங்கள், ரேஷன் கடைகள், சமுதாயக்கூடங்கள் போன்ற அரசு கட்டிடங்கள் பெரும்பாலும் நீர்நிலைகளில்தான் கட்டப்பட்டு உள்ளன. நீர்நிலைகளில் அமைக்கப்பட்டுள்ள அரசுக் கட்டிடங்களை அகற்றக் கோரும் ஏராளமான வழக்குகளை இந்த கோர்ட்டு சந்தித்து வருகிறது.

எதிர்கால திட்டம்

அரசு புறம்போக்கு நிலங்களின் தற்போதைய நிலை என்ன? எதிர் காலங்களில் இந்த நிலங்களை பயன்படுத்துவது தொடர்பான திட்டங்கள் என்ன? என்பது குறித்து தமிழக அரசின் நில அளவைப்பிரிவு கமிஷனரிடம் கேட்டு அரசு வக்கீல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு, அடுத்தக்கட்ட விசாரணையை வருகிற 10-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்