தி.மு.க. ஆட்சியில் மட்டும் குண்டு வெடிப்பு, பயங்கரவாத சம்பவங்கள் நடப்பது ஏன்? அண்ணாமலை கேள்வி
‘தி.மு.க. ஆட்சியில் மட்டும் குண்டு வெடிப்பு, பயங்கரவாத சம்பவங்கள் நடப்பது ஏன்?’ என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.;
எச்சரிக்கை விடுத்தும் தாமதம் ஏன்?
தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவை குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையும் சிறப்பாக நடைபெறுகிறது. ஆனால் முடிவெடுக்க வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் எதுவுமே செய்யவில்லை. கடந்த 18-ந் தேதியே மத்திய உள்துறை, தமிழக அரசுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தது. ஆனால் போலீஸ் டி.ஜி.பி.யும், கோவை மாநகர கமிஷனரும் எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்கிறார்கள். உரிய எச்சரிக்கை கொடுக்கப்பட்டும் 18, 19, 20-ந் தேதிகளில் ஒன்றும் செய்யாமல், 21-ந் தேதி மாலை அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு மாநில உளவுத்துறை அந்த எச்சரிக்கையை மேற்கோள்காட்டி கடிதம் அனுப்பியுள்ளது. 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்திருக்கிறது.
மாநில உளவுத்துறை எழுதிய கடிதம் என்னிடம் இருக்கிறது. அதை கொடுக்கவும் தயார். ஆனால் முதல்-அமைச்சர் என்ன நடவடிக்கை எடுத்தார்? என்பது தெரிய வேண்டும்.
என்.ஐ.ஏ. என்னை விசாரித்தால்...
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகள் மீது விரைவில் தீர்ப்புகள் வருகிறது. எல்லோருக்கும் நேரம் வரும். தவறு செய்தவர்கள் தப்பிக்கவே முடியாது. கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் முதலில் என்னைத்தான் என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும் என்று தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சொல்லியிருக்கிறார்கள். என்.ஐ.ஏ. என்னை விசாரித்தால் என்னிடம் உள்ள ஆவணங்களை அவர்களிடம் சமர்ப்பிப்பேன்.
இதை சிலிண்டர் வெடிப்பு என்று சொல்லச்சொல்லி என்னை யார் வலியுறுத்தினார்கள்? என எல்லாவற்றையும் சொல்ல தயாராக இருக்கிறேன். இதனால் மிகப்பெரிய பூதம் வெடிக்கும். பல உயர் அதிகாரிகளின் பதவிகள் போக வாய்ப்பு இருக்கிறது. அந்த உயர் அதிகாரிகளுக்கு தி.மு.க. அமைச்சர்கள் நிர்பந்தம் கொடுத்தார்களா? கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் (செந்தில் பாலாஜி) இந்த சம்பவத்தை சிலிண்டர் வெடிப்பு தான் என்று சொல்லி வற்புறுத்தினாரா?, நேர்மையான போலீஸ் அதிகாரிகள் கைகள் கட்டப்பட்டது ஏன்? இதெல்லாமே என்.ஐ.ஏ. விசாரணையில் வரவேண்டும். எங்களிடம் உள்ள ஆவணங்களை அதிகாரிகளிடம் வழங்கிய பிறகு பொதுவெளியில் வெளியிடுவோம்.
சவால் விடவேண்டாம்
தமிழகத்தில் உள்துறை, சட்டம்-ஒழுங்கு யார் கையில் இருக்கிறதோ, அவர்கள் மீது முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய எச்சரிக்கை விடுக்கப்பட்டும் 4 நாட்கள் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பது குறித்து சட்டமன்ற குழு கூடி வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும். இதையெல்லாம் முதல்-அமைச்சர் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறாரா? என்பதை தெரிந்துகொண்டு, அந்த அமைச்சர் (செந்தில் பாலாஜி) பேசட்டும். திட்டமிட்டு தமிழகத்தில் விளையாடி இருக்கிறார்கள். மற்ற அரசியல்வாதிகளுடன் விளையாடுவது போல செந்தில்பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்கள் எங்களுடன் விளையாடக்கூடாது. பேசிவிட்டு செயல்படுங்கள். சவால் விடவேண்டாம். அரசியல்வாதிகளை விடுங்கள், போலீஸ் அதிகாரிகள் இதனை மறுப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
முதல்-அமைச்சருக்கு தவறான தகவல்கள் கொடுக்கப்படுகிறது. மாநில உள்துறை, முதல்-அமைச்சருக்கு கொடுத்த ஒரு அறிக்கையில், 'அண்ணாமலை அதிகமாக பேசினால் இந்துக்கள் கொதித்தெழுந்து, தங்கள் உடைமைகளை தாங்களே சேதமாக்கி, அந்த பழியை இஸ்லாமியர்கள் மீது போடுவார்கள். அது மாதிரி அவர் செட்டப் வைத்திருக்கிறார். எனவே அண்ணாமலையை கண்காணிக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படியா முட்டாள்தனமாக இருப்பார்கள்? யாரை பிடிக்கவேண்டுமோ அவர்களை விட்டுவிட்டு என்னை சுற்றி நோட்டம் விடுவது ஏன்? நானும் காவல்துறையில் பதவி வகித்துள்ளேன். ஆனால் இந்தமாதிரி ஒரு அறிக்கையை என் வாழ்நாளில் படித்தது கிடையாது.
தி.மு.க. ஆட்சியில்...
1998-ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின்போதே, ஒருவாரம் முன்பு இதேமாதிரி ஒரு எச்சரிக்கை அறிவிப்பு வந்தது என்று கூறப்பட்டது. அந்த சர்ச்சை இன்றும் தொடருகிறது. எப்படி இதுபோல வெடிகுண்டு வெடிப்பு சம்பவங்கள், பயங்கரவாதி தாக்குதல் இவையெல்லாம் தி.மு.க. ஆட்சியில் மட்டும் நடக்கிறது? ஏனெனில் உள்துறையின் மீது கவனம் இல்லை. தேசவிரோத சக்திகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். முதல்-அமைச்சர் நல்லவராக இருந்தாலும், சுற்றியுள்ளவர்களும் நல்லவராக இருக்கவேண்டும்.
வேண்டியவர்களுக்கெல்லாம் பதவிகள் கொடுத்திருக்கிறார்கள். அப்படி பதவி பெற்றவர்கள் என்ன ஆலோசனை தரமுடியும்? எனவே தன்னை சுற்றியிருப்பவர்கள் குறித்து முதல்-அமைச்சர் ஒரு நிமிடம் யோசித்து பார்க்கவேண்டும். என்னை பற்றி தவறாக பேசுவது தான் அவர்களது வேலை. முதல்-அமைச்சரை ஏமாற்றவே நினைக்கிறார்கள். இவர்களை போன்றவர்களை நீக்கிவிட்டு வேறு ஆட்களை நியமியுங்கள். தமிழகத்தில் மீண்டும் ஒரு சம்பவம் இப்படி நடக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.