விழுப்புரம் மாவட்டத்தில்சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்?போலீசாரின் செல்போன் எண்களை வைத்து விசாரணை
விழுப்புரம் மாவட்டத்தில் சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? என்பது தொடா்பாக போலீசாரின் செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.;
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்த 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மதுவிலக்கு அமல்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டனர். அதுபோல் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் மாற்றப்பட்டார்.
இதனிடையே கோட்டக்குப்பம், திண்டிவனம் உட்கோட்டங்களில் பணியாற்றி வரும் போலீசார்களில் யார், யாரெல்லாம் சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது குறித்து அவர்களுடைய செல்போன் எண்களை வைத்து, சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த விசாரணையின் முடிவில் மேலும் சில போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.