சித்திரை திருவிழா நடைபெறும் நிலையில்கைத்துப்பாக்கி, தோட்டாக்களுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது

மதுரை சித்திரை திருவிழா நடைபெறும் நிலையில், கைத்துப்பாக்கி, தோட்டாக்களுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2023-05-03 20:58 GMT


மதுரை சித்திரை திருவிழா நடைபெறும் நிலையில், கைத்துப்பாக்கி, தோட்டாக்களுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்

தெப்பக்குளம் பகுதியில் ரோந்து

மதுரையில் மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காக போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தெப்பக்குளம் போலீசார் வைகை ஆற்றின் தென்கரையோர சாலை பகுதியில் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

துப்பாக்கியுடன் 2 பேர் கைது

அதில் சென்னை மேற்கு அண்ணாநகரை சேர்ந்த தனசேகர் (வயது 52), மதுரை கோமதிபுரம் ஆவின்நகர் பகுதியை சேர்ந்த சுபாஸ் (40) என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர்களை போலீசார் சோதனை செய்த போது அனுமதியின்றி கைத்துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், அவர்களது நண்பர் ஒருவர் மூலமாக துப்பாக்கியை பெற்றதும் தெரிய வந்தது. மேலும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும், சித்திரை திருவிழா கூட்டத்தை பயன்படுத்தி ஏதாவது குற்றசம்பவங்களில் ஈடுபட வந்துள்ளார்களா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்திரை திருவிழா நடைபெற்று வரும் நிலையில் தெப்பக்குளம் பகுதியில் 2 பேர் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்