பறவைகளை சுட்டபோது குறிதவறி அக்காள், தம்பி மீது குண்டு பாய்ந்தது
அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தில் பறவைகளை சுட்டபோது குறிதவறி அக்காள், தம்பி மீது குண்டு பாய்ந்து காயமடைந்தனர்.
அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தில் பறவைகளை சுட்டபோது குறிதவறி அக்காள், தம்பி மீது குண்டு பாய்ந்து காயமடைந்தனர்.
குண்டு பாய்ந்தது
அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தில் செடி, கொடிகள் அகற்றும் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் சுமார் 10 பேர் வேலை செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் விமானம் இறங்கும் ஓடுதளம் பகுதியில் அவர்கள் செடி, கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ராஜாளி கடற்படை தள போலீஸ் பிரிவினர் ஓடுதளம் பகுதியில் பறவைகள் வந்ததால் அதனை விரட்ட அதற்காக பயன்படுத்தும் துப்பாக்கியால் அந்த பகுதியில் சுட்டதாக கூறப்படுகிறது. அப்போது தவறுதலாக அங்கு வேலை செய்து கொண்டிருந்த அரக்கோணம் பெருமுச்சி பகுதியை சேர்ந்த செல்வி (வயது45) மற்றும் இவரது சகோதரர் சங்கரன் (40) ஆகியோர் மீது குண்டு பாய்ந்ததாக கூறப்படுகிறது.
போலீஸ் விசாரணை
இதில் செல்வி மற்றும் சங்கரன் ஆகியோர் கழுத்தின் பின்புறம் மற்றும் முதுகு பகுதியில் குண்டு பாய்ந்து வலியால் அலறியுள்ளனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் சென்று அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடற்படை தளத்தில் உள்ள ராஜாளி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே நேற்று காலை காயம் ஏற்பட்ட பகுதியில் மீண்டும் வலி அதிகமாக உள்ளது எனக் கூறி அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சங்கரன் மற்றும் செல்வி ஆகிய இருவரும் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர் விசாரித்து வருகின்றார்.