வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணி முடிவது எப்போது?

மீனாட்சி அம்மன் கோவில் வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகளுக்கு சிறப்பு அதிகாரியை நியமித்து பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-09-28 20:07 GMT

மதுரை,

மீனாட்சி அம்மன் கோவில் வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகளுக்கு சிறப்பு அதிகாரியை நியமித்து பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

வீரவசந்தராயர் மண்டபம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி இரவு நடந்த தீ விபத்தில் கிழக்கு வாசல் ராஜகோபுரம் வழியாக சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலும் எரிந்து நாசமானது.. அன்றைய தினத்தில் இருந்து கிழக்கு ராஜகோபுரம் மூடப்பட்டு பக்தர்கள், பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் விபத்து நடந்த பகுதியை பழமை மாறாமல் ஆகம விதிப்படி புனரமைக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகமும், அரசும் முடிவு செய்தது.

அதன்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டினம் மலை அடிவாரத்தில் கற்கள் வெட்டி எடுக்க ரூ.6.40 கோடியும், மண்டப வடிவமைப்புக்கு ரூ.11.70 கோடியும் நிதி அரசு ஒதுக்கீடு செய்தது. அங்கு கடந்த 2021-ம் ஆண்டு முதல் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான வளையங்குளத்தில் உள்ள கூடல்செங்குளம் பண்ணையில் இறக்கி வைக்கப்பட்டது. அந்த கற்களை தூண்களாக செதுக்கும் பணி திருப்பூர் ஸ்பதி வேல்முருகன் என்பவருக்கு அரசு வழங்கியது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் காெணாலி காட்சி மூலம் வீரவசந்தராயர் மண்டப அடிக்கல் நாட்டு பணியை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து பணிகள் நடைபெற்றன.

அதிகாரிகள் ஆய்வு

இது குறித்து கோவில் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, பண்ணையில் மேலும் 9 தூண்கள் செதுக்கப்பட்டு தயாராக உள்ளன. மேலும் கற்களை வெட்டும் பணி தற்போது அரசின் டாமின் நிறுவனம் தான் செய்ய உள்ளது. 20 அடி உயரமுள்ள 60 தூண்கள் தான் தற்போது வெட்டப்பட உள்ளது. அதற்கான அனுமதி கிடைத்த உடன் வருகிற டிசம்பர் மாதம் கற்கள் வெட்டும் பணி தொடங்கப்படும். அவ்வாறு கற்கள் வெட்டி மதுரைக்கு கொண்டு வரப்பட்டால் விரைவில் அதனை செதுக்கி வீரவசந்தராயர் மண்டபத்தில் நிறுவிவிடலாம். மேலும் கோவிலுக்கு தேவைப்படும் தூண்களின் அளவு குறித்து ஆய்வு செய்ய டாமின் நிறுவனஅதிகாரிகள் வீரவசந்தராயர் மண்டப பகுதிக்கு வந்தனர். அவர்கள் என்னென்ன அளவில் தூண்கள் தேவைப்படுகிறது என்று ஆய்வு செய்து சென்றுள்ளனர் என்றார்.

சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்

சமூகஆர்வலர் ஆதிசேசன் கூறும் போது,

வீரவசந்தராயர் மண்டபத்தை சீரமைக்கும் பணி எப்போது தொடங்கி முடிவடையும் என்று தெரியவில்லை. ஏன் என்றால் தற்போது அங்கு 4 தூண்கள் நிறுவியே 6 மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் 70-க்கும் மேற்பட்ட தூண்கள் வைக்கப்பட வேண்டும். கற்கள் வெட்டும் பணி தாமதம் ஆகிறது. எனவே சிறப்பு அதிகாரிைய நியமித்து அரசின் அனுமதியை உடனே பெற்று தூண்களை வெட்டி எடுப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கிடையில் 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக கூறுகிறார்கள். எனவே அரசு விரைவாக வீரவசந்தராயர் மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்