வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கடைகள் திறக்கப்படுவது எப்போது?குழந்தைகளுடன் பயணிகள் அவதி

வேலூர் புதிய பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வந்து 4 மாதங்கள் ஆகியும் கடைகள் ஏதும் திறக்கப்படாததால் பயணிகள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

Update: 2022-11-19 18:14 GMT

வேலூர் புதிய பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வந்து 4 மாதங்கள் ஆகியும் கடைகள் ஏதும் திறக்கப்படாததால் பயணிகள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

வேலூர் புதிய பஸ் நிலையம் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் ரூ.53 கோடியே 13 லட்சத்தில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டது. இங்கு ஒரே நேரத்தில் 84 பஸ்கள் நிற்கும் வசதி, 24 கண்காணிப்பு கேமராக்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 6 கழிவறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் 29-ந்தேதி திறந்து வைத்து, பஸ் போக்குவரத்தையும் தொடங்கி வைத்தார். பஸ் நிலையத்தில் அனைத்து பணிகளும் நிறைவடையாததால் அங்கிருந்து சென்னை, காஞ்சீபுரம், தாம்பரம் உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த செப்டம்பர் மாதம் 11-ந்தேதி முதல் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதனால் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள்.

3 முறை ஏலம் ஒத்திவைப்பு

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் தரை, முதல் தளத்தில் 85 அறைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் 7 அறைகள் 24 மணி நேரமும் இயங்கும் முதலுதவி அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் ஓய்வு அறை, போக்குவரத்து ஊழியர்களுக்கு 2 ஓய்வு அறைகள், காவலர் அறை, காவல் கண்காணிப்பு கேமராக்கள் அறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதைத்தவிர ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு சில அறைகள் கடைகளாக மாற்றப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அவற்றை தவிர மீதமுள்ள 75 அறைகள் கடைகளாக மாற்றப்பட்டு கடந்த மாதம் ஆகஸ்டு, செப்டம்பர் மற்றும் கடந்த 16-ந்தேதி பொது ஏலம் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்களால் 3 முறை ஏலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அறைகளின் மாதாந்திர வாடகை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும், அதனை குறைப்பதற்காக ஏலம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளின் அழுத்தம், கடைகள் எடுப்பது தொடர்பாக ஓட்டல் உரிமையாளர்கள், தொழில் அதிபர்கள், அரசியல் கட்சியினரின் போட்டா போட்டி உள்ளிட்டவை காரணமாக ஏலம் ஒவ்வொரு முறையும் ஒத்தி வைப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பஸ் நிலையம் திறந்து 4 மாதங்களுக்கு பின்னரும் புதிய பஸ் நிலையத்தில் உள்ள அறைகளை ஏலம் விடாமல் காலம் தாழ்த்தி வருவது மாநகராட்சி அதிகாரிகளின் நிர்வாக திறன் இன்மை மற்றும் சரியான திட்டமிடல் இல்லாததே காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

பயணிகள் கடும் அவதி

ஏலம் விடாததால் பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள அறைகள் பயன்பாட்டிற்கு வராமல் மூடி கிடக்கின்றன. அதனால் உணவகங்கள், டீ, காபி, குளிர்பான கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் தங்கள் பச்சிளங் குழந்தையின் பசியாற்ற பால், பிஸ்கெட் உள்ளிட்டவற்றை தேடி அலைந்து வெளியே சென்று வாங்குவது பார்க்க பரிதாபமாக உள்ளது. வெளிமாநிலங்கள், பிறமாவட்டங்களில் இருந்து பஸ்சில் வேலூர் வழியாக செல்லும் பயணிகள் பஸ் நிலையத்தில் உணவகங்கள், டீக்கடைகள் இல்லாததால் பசியுடன் பயணம் செய்யும் அவலநிலை காணப்படுகிறது.

பஸ் நிலையத்தின் வெளியே சென்று உணவு சாப்பிடும் பயணிகள் சில சமயங்களில் பஸ்சை தவறவிட்டு குறிப்பிட்ட நேரத்தில் தாங்கள் செல்லும் இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதி அடைகிறார்கள். இரவு நேரத்தில் குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியவர்கள் அத்தியாவசிய பொருட்களை பஸ் நிலையம் வெளியே சென்று வாங்க முடியாமல் தவிக்கிறார்கள். அதேபோன்று மருந்துக்கடை, ஏ.டி.எம். மையம் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை. அதனால் அவசர தேவைக்காக மருந்து, மாத்திரைகள் வாங்க மற்றும் பணம் எடுப்பதற்கு பயணிகள் வெகுதூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. உணவு, டீ, காபி, பிஸ்கெட், குளிர்பானம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க அலைந்து திரியும் அவலநிலையை மாற்ற புதிய பஸ் நிலையத்தில் உள்ள அறைகளை போர்க்கால அடிப்படையில் ஏலம் விட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு வேலூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் திறக்கப்படுவது எப்போது என்று வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வேலூர் வழியாக பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளும் விடை தெரியாமல் கடந்து செல்கின்றனர்.

பஸ் நிலையத்தில் கடைகள் இல்லாததால் ஏற்படும் அவதிகள், சிரமங்கள் குறித்து பயணிகள் கூறியதாவது:-

துர்நாற்றம் வீசுகிறது

புதுச்சேரியை சேர்ந்த அஜித்குமார்:- நான் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வருகிறேன். வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஏ.டி.எம். மையம், மருந்து கடை, டீக்கடை, ஓட்டல்கள் உள்ளிட்ட எந்த கடைகளும் இல்லை. அனைத்து கடைகளும் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. அவசர, அத்தியாவசிய பொருட்கள் வாங்க பஸ் நிலையத்துக்கு வெளியே செல்ல வேண்டிய நிலை உள்ளது. அந்த சமயத்தில் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் சென்றுவிடுமே என்ற அச்சம் உள்ளது. இங்கு சிலர் திறந்தவெளியில் உணவுப்பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இது சுகாதாரமாக இருக்குமா? என்ற கேள்வி உள்ளது. பஸ் நிலையத்தில் குப்பைகள் ஆங்காங்கே கிடக்கிறது. அதனை உடனுக்குடன் தூய்மை பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். மேலும் கழிவறைக்கு செல்ல கட்டணம் வசூல் செய்கின்றனர். அதனால் பலர் பஸ் நிலைய வளாக ஒரத்தில் சிறுநீர் கழிக்கின்றனர். அதன்காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. எனவே இலவச கழிவறையை அதிகளவில் திறந்து, அதனை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

மும்பையை சேர்ந்த சிவா:-மதுரையை பூர்வீகமாக கொண்ட நான் சில ஆண்டுகளுக்கு பின்னர் மும்பையில் இருந்து குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்கிறேன். வரும் வழியில் ஸ்ரீபுரத்தில் உள்ள தங்கக்கோவிலை காண்பதற்காக வேலூருக்கு வந்தேன். குழந்தைகள் மற்றும் உடைமைகளை உடன் எடுத்து செல்வதற்கு சிரமமாக இருந்தது. எனவே உடைமைகளை வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பொருட்கள் பாதுகாக்கும் அறையில் வைத்துவிட்டு தங்கக்கோவிலுக்கு செல்லலாம் என்று எண்ணினேன். ஆனால் பஸ் நிலையத்தில் பொருட்கள் பாதுகாக்கும் அறை இல்லை. அதேபோன்று பயணிகள் தங்கும் இடமும் இல்லாதது ஏமாற்றம் அளித்தது.

பஸ் நிலையத்தில் மாடுகள், நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு குழந்தைகளை கடித்துவிடுமோ என்ற அச்சம் காணப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

குடிநீர் வருவதில்லை

வேலூர் வள்ளலார் பகுதியை சேர்ந்த அமலா:- அனைத்து பஸ் நிலையத்திலும் பயணிகளின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கண்டிப்பாக கடைகள் காணப்படும். ஆனால் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கடைகள் திறக்கப்படாததால் பயணிகள் அவதிகள் அடைகிறார்கள். பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது. ஆனால் சில நேரங்களில் அதில் தண்ணீர் வருவதில்லை. 24 மணிநேரமும் குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

பஸ்கள் வரும் நேரம் அறிவிப்பு செய்யப்படுகிறது. இங்கிருந்து செல்லும் பஸ்களின் கால அட்டவணையை பஸ் நிலையத்தின் முகப்பில் வைக்க வேண்டும். பஸ் நிலையத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புறக்காவல் நிலையம் அமைத்து 24 மணி நேரமும் போலீசார் பணியில் அமர்த்த வேண்டும்.

பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ய கட்டுப்பாட்டு அறையையும் பஸ் நிலையத்திலேயே அமைக்க வேண்டும். பஸ் நிலையத்தில் பயணிகள் அமரும் இடத்தின் அருகே இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்