கிணத்துக்கடவு வழியாக கூடுதல் ரெயில்கள் இயக்கப்படுவது எப்போது?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கிணத்துக்கடவு வழியாக கூடுதல் ரெயில்கள் இயக்கப்படுவது எப்போது? என்று பொதுமக்கள், பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு வழியாக கூடுதல் ரெயில்கள் இயக்கப்படுவது எப்போது? என்று பொதுமக்கள், பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.
அகல ரெயில் பாதை
ேகாவை மாவட்டம் கிணத்துக்கடவில் கடந்த 2009-ம் ஆண்டுக்கு முன்பு போத்தனூரில் இருந்து கிணத்துக்கடவு வழியாக மீட்டர் கேஜ் ரெயில் பாதையில் ரெயில்கள் இயக்கப்பட்டன. கடந்த 2009-ம் ஆண்டு இறுதியில் போத்தனூர்-பொள்ளாச்சி மீட்டர் கேஜ் ரெயில்பாதை அகல ரெயில்பாதையாக மாற்றும் பணி தொடங்கியது. இந்த பணிகள் 8 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவடைந்து. அதன் பின்னர் போத்தனூரில் இருந்து கிணத்துக்கடவு சொலவம் பாளையம் ரெயில்வே கேட் வரை உள்ள தண்டவாள பகுதிகள் சேலம் ெரயில்வே கோட்டத்திற்கும், கிணத்துக்கடவு முதல் பொள்ளாச்சி வரை பாலக்காடு கோட்டத்திற்கும் இந்த ெரயில்வே பகுதிகள் மாற்றப்பட்டன. தற்போது கிணத்துக்கடவு ெரயில் நிலைய பகுதி பாலக்காடு ரெயில்வே கோட்ட பகுதியில் உள்ளது. அதன் பின்னர் 2017-ம் ஆண்டு ஜூலை 15-ம் நாள் முதல்முறையாக கோவையில் இருந்து போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சிக்கு ரெயில் இயக்கப்பட்டது.
கூடுதல் கட்டணம்
கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு ரெயிலில் செல்ல 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. மேலும் போத்தனூர் -பொள்ளாச்சி வழித்தடம் மின் வழி பாதையாக மாற்றப்பட்டது. தற்போது போத்தனூர் - பொள்ளாச்சி இடையே அனைத்து ரெயில்களும் மின்சார ரெயிலாக இயங்கி வருகிறது. ஆனால் தற்போது ரெயில் கட்டணம் அதிகரித்துள்ளதால் கோவை, போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சி செல்ல பஸ் கட்டணத்தைவிட அதிகமாக ரூ.30 வசூலிக்கப்படுகிறது. ரெயில் கட்டணம் அதிகரித்துள்ளதால் தற்போது பெரும்பாலான பயணிகள் ரெயில்களை விட்டு விட்டு அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் பயணிகள் கூறியதாவது:-
ரெயில்வே மந்திரிக்கு கோரிக்கை
கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ. செ.தாமோதரன்:-
மீட்டர் கேஜ் ரெயில் பாதையாக இருந்த போது இந்த வழியே இயக்கப்பட்ட போத்தனூர் - கிணத்துக்கடவு - பொள்ளாச்சி வழித்தடத்தில் இயக்கப்பட்ட கோவை - ராமேசுவரம், கோவை - தூத்துக்குடி, கோவை - மதுரை, கோவை - கொல்லம் ஆகிய ரெயில்களை உடனடியாக மீண்டும் கிணத்துக்கடவு வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிணத்துக்கடவு- பொள்ளாச்சி ரெயில்பாதையை பாலக்காடு ெரயில்வே கோட்டத்தில் உள்ளது. இதை மதுரை அல்லது சேலம் ரெயில்வே கோட்டத்தில் சேர்க்க வேண்டும் என மத்திய ரெயில்வே மந்திரியிடம் ஏற்கனவே மனு கொடுத்துள்ளேன். மேலும் கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு கடந்து செல்ல நடைபாதை மேம்பாலம் விரைந்து அமைக்க வேண்டும். நெல்லையிலிருந்து பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ெரயில் கிணத்துக்கடவு ரெயில்நிலையத்தில் நிற்காமல் செல்கிறது. இந்த ரெயில் கிணத்துக்கடவு ெரயில் நிலையத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.
கிணத்துக்கடவு பாலசுப்பிரமணியம் (ஆசிரியர்):-
போத்தனூர் -பொள்ளாச்சி இடையே உள்ள ரெயில் பாதையில் ரூ.500 கோடிக்கு மேல் செலவு செய்து நவீனப்படுத்தப்பட்டு கூடுதல் ரெயில்களை இயக்கப்படாமல் இருப்பது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. கிணத்துக்கடவிலிருந்து ரெயில் நிலையத்திற்கு செல்ல ஆட்டோவில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதால், கோவை, பொள்ளாச்சி இடையே கூடுதல் ரெயில்களை இயக்கி, கோவை -பொள்ளாச்சி பகுதியில் இருந்து இயக்கப்படும் டவுன் பஸ்கள் கிணத்துக்கடவு ரெயில் நிலையம் வரை சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து சென்னை செல்லும் ரயிலை கிணத்துக்கடவிலிருந்து பொள்ளாச்சி வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நல்லட்டிபாளையத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (விவசாயி):-
பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு இயக்கப்படும் ரெயிலை கோவையில் இருந்து கிணத்துக்கடவு பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு இயக்க வேண்டும். முக்கிய விழாக்காலங்களில் திருச்செந்தூர் ரெயிலில் கூட்ட நெரிசல் அதிகம் இருப்பதால் கடும் சிரமம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. அதேபோல் கோவையில் இருந்து கிணத்துக்கடவு வழியாக ராமேசுவரத்திற்கு ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் ரயில்கள் இயக்கினால் விளை பொருட்களை கோவை பொள்ளாச்சிக்கு கொண்டு வர ஏதுவாக இருக்கும்.
மீண்டும் இயக்க வேண்டும்
கோவில்பாளையத்தை சேர்ந்த சதீஸ்குமார்:-
கோவையிலிருந்து தொடக்கத்தில் காலை 5.30 மணிக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தது. அந்த ரெயில் 6.15 மணிக்கு பொள்ளாச்சி சென்று, அதன் பின்னர் 7.25 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு புறப்பட்டு 8.30 மணிக்கு கோவை ரெயில் நிலையத்ெதிற்கு வருகிறது. தற்போது காலை 5.30 மணிக்கு கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் ரெயிலை ரெயில்வே துறை நிறுத்தியுள்ளது. தற்போது இந்த ரெயிலை ரத்து செய்து இருப்பதால் காலை நேரங்களில் பல்வேறு நகரங்களில் இருந்து கோவைக்கு வரும் மக்கள் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி பகுதிக்கு செல்வதற்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோவையில் இருந்து காலையில் போத்தனூர் கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சி செல்லும் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும்.
கோவையில் இருந்து கிணத்துக்கடவிற்கு ரயிலில் செல்ல கட்டணம் எவ்வளவு?
கோவையில் இருந்து கிணத்துக்கடவு செல்ல அரசு எக்ஸ்பிரஸ் பேருந்தில் 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாதா பேருந்தில் 16 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு இயக்கப்படும் ரயிலில் கிணத்துக்கடவு வர கட்டணம் 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் பஸ் கட்டணத்தை விட அதிகம். இந்த கட்டணத்தை குறைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு 59 கிலோ மீட்டர் தூரத்தில் சுமார் 7 ரயில் நிலையங்கள் உள்ளன. ஆனால் பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் 45 கிலோ மீட்டர் தூரத்திற்க்குள் கோவில்பாளையம், கிணத்துக்கடவு, போத்தனூர் ஆகிய மூன்று இடங்களில் இருந்த ரயில் நிலையங்களில், கோவில்பாளையத்தில் உள்ள ரயில் நிலையம் ஏற்கனவே மூடப்பட்டுள்ளது. தற்போது கோவை பொள்ளாச்சி இடையே கிணத்துக்கடவு, போத்தனூர் ஆகிய இரண்டு ரயில் நிலையம் மட்டுமே உள்ளது. பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் வழியில் அதிக ரயில் நிலையத்தை அமைத்துள்ள பாலக்காடு கோட்டம் ரயில்வே நிர்வாகம்.தமிழகப் பகுதியில் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு செல்லும் வழியில் மட்டும் இரண்டு ரயில் நிலையங்கள் மட்டும் விட்டுவிட்டு மூடப்பட்ட கோவில் பாளையம் ரயில் நிலையத்தை திறக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் மெளவுனம் காப்பது மக்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
கோவில்பாளையத்தில் மூடப்பட்ட ரயில் நிலையம் திறக்கப்படுமா?
கிணத்துக்கடவிற்கு அடுத்தபடியாக கோவில் பாளையத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு ரயில் நிலையம் இருந்தது, அதன் பின்னர் அந்த ரயில் நிலையம் மூடப்பட்டு தற்போது அந்த ரயில் நிலையம் பழுது அடைந்து அந்தபகுதியில் புதர்மண்டி விட்டது. ரயில் நிலையத்தை ரெயில்வேதுறை மீண்டும் புதுப்பித்து கோவில்பாளையத்திலிருந்து கோவை, பொள்ளாச்சி செல்லவும் கோவில்பாளையம் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து ஏராளமான பொருட்கள் வெளி மாவட்டங்களுக்கு, மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. ஆகவே கோவில்பாளையத்தில் ஏற்கனவே இருந்த ரயில் நிலையத்தை செயல்பட ரயில்வே நிர்வாகம் உத்தரவிட வேண்டும். கோயில்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், ஊராட்சித் தலைவர்கள் அரசியல் கட்சியினர் பலமுறை ரயில்வே நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தியும் எந்த பதிலும் இல்லாத சூழ்நிலையில் உள்ளது. ஆகவே கோவில்பாளையம் பகுதி மக்களிடம் மூடப்பட்ட ரயில் நிலையம் திறக்கப்படுமா? திறக்க படாதா? என்ற கேள்வி எழுந்து வருகிறது இதற்கு பதில் ரயில்வே நிர்வாகம் கையில் உள்ளது.