மரத்தில் கார் மோதி கவிழ்ந்ததில் தாய்-மகன், ஆசிரியை பலி

ஓட்டப்பிடாரம் அருகே டயர் வெடித்ததால் கார் மரத்தில் மோதி கவிழ்ந்ததில் தாய்-மகன், ஆசிரியை பரிதாபமாக இறந்தனர்.

Update: 2022-08-28 12:58 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே டயர் வெடித்ததால் கார் மரத்தில் மோதி கவிழ்ந்ததில் தாய்-மகன், ஆசிரியை பரிதாபமாக இறந்தனர்.

மகளை பார்க்க சென்றனர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பெத்துரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 65). ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர். இவரது மனைவி சங்கரேஸ்வரி (60). இவர்களுக்கு கனகதர்மராஜ் (40), சங்கர் (38), ராமர் (35) ஆகிய 3 மகன்களும், பிரபா என்ற மகளும் உள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபாவை திருச்செந்தூரில் திருமணம் செய்து கொடுத்தனர். தற்போது அவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் கிராம முறைப்படி கட்டுசோறு கொண்டு செல்வதற்காக பழனிச்சாமி குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

காரில் புறப்பட்டனர்

அதன்படி நேற்று அதிகாலை பழனிச்சாமி தனது மனைவி, 3 மகன்கள், மருமகள், பேரன்-பேத்திகள் மற்றும் அதே ஊரை சேர்ந்த ஆசிரியை மருதாயி (55) உள்பட 11 பேருடன் காரில் திருச்செந்தூருக்கு புறப்பட்டனர். காரை சங்கர் ஓட்டினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தை அடுத்த குறுக்குச்சாலை அருகே மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டு இருந்தது.

2 பெண்கள் பலி

அப்போது, எதிர்பாராதவிதமாக காரின் டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த வேப்பமரத்தில் மோதி, சாைலயோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் சங்கரேஸ்வரி, ஆசிரியை மருதாயி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். மற்றவர்கள் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

மகனும் சாவு

இதுகுறித்து உடனடியாக ஓட்டப்பிடாரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் முத்துராமன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கரும் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 8 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

விபத்தில் பலியான சங்கரேஸ்வரி, மருதாயி ஆகியோரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மரத்தில் கார் மோதிய விபத்தில் தாய்-மகன், ஆசிரியை பலியான சம்பவம் பெரும் சோகத்ைத ஏற்படுத்தியது.



Tags:    

மேலும் செய்திகள்