தரம் உயர்ந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் எப்போது?
தரம் உயர்ந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் எப்போது? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அரசியல், ஆன்மிகம், வரலாறு, தொழில், விவசாயம் என பல துறைகளில் பலருக்கு திருப்பம் கொடுத்தது திண்டுக்கல். உலக புகழ்பெற்ற பழனி, கொடைக்கானல் ஆகியவை இருந்தாலும் மாவட்டத்தின் தலைநகராக திண்டுக்கல் திகழ்கிறது.
திண்டுக்கல்
இந்திய சுதந்திர போராட்ட களத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட இடங்களில் திண்டுக்கல்லும் ஒன்றாகும். அதை நகரின் மையப்பகுதியில் நிற்கும் மலைக்கோட்டையே சாட்சி ஆகும். அதுமட்டுமின்றி பிரசித்தி பெற்ற மும்மத வழிபாட்டு தலங்களும் இருக்கின்றன.
அதேபோல் திண்டுக்கல்லில் 80-க் கும் மேற்பட்ட ரெயில்கள் நின்று செல்லும் ரெயில் நிலையம், 800-க்கும் அதிகமான பஸ்கள் வந்து செல்லும் காமராஜர் பஸ் நிலையமும் உள்ளன. அதேபோல் வணிக வளாகங்கள், மார்க்கெட், பள்ளி மற்றும் கல்லூரிகளும் இருக்கின்றன. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வந்து செல்லும் இடமாக திண்டுக்கல் விளங்குகிறது.
மாநகராட்சி
அந்த வகையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியூர்களில் இருந்து திண்டுக்கல் நகருக்கு வந்து செல்கின்றனர். இதுதவிர திண்டுக்கல் நகரில் 2½ லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இந்த மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது அவசியம்.
இத்தகைய திண்டுக்கல் கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை நகராட்சியாக இருந்தது. திண்டுக்கல்லில் வசிக்கும் மக்கள் மட்டுமின்றி வெளியூர் மக்களும் குவிந்து விடுவதால் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் திண்டுக்கல் கடந்த 2014-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
எல்லை விரிவாக்கம்
திண்டுக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் அடிப்படை வசதிகள் மேம்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. மாநகராட்சியாக தரம் உயர்ந்தால் அரசிடம் இருந்து அதிக நிதி ஒதுக்கப்படும். அதன்மூலம் சாலை, சாக்கடை கால்வாய்கள், குடிநீர், அனைவருக்கும் கான்கிரீட் வீடு, கழிப்பறை, நெரிசல் இல்லாத போக்குவரத்து வசதி ஆகியவை கிடைக்கும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தனர்.
ஒரு ஊர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதும் முதலில் எல்லை விரிவாக்கம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி திண்டுக்கல் மாநகராட்சியின் எல்லையை விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி திண்டுக்கல்லை சுற்றி இருக்கும் 10 ஊராட்சிகளை மாநகராட்சிக்குள் கொண்டு வர அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
8 ஆண்டுகள்
மேலும் எல்லையை விரிவாக்கம் செய்வதற்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் 7 ஊராட்சிகளை மட்டும் இணைக்கலாம் என்ற ஆலோசனையும் முன்வைக்கப்பட்டது. எனினும் எல்லை விரிவாக்கம் மட்டும் இதுவரை நடைபெறவில்லை.
திண்டுக்கல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 8 ஆண்டுகளை கடந்து விட்ட போதிலும், நகராட்சியாக இருந்த 48 வார்டுகளுடன் தான் செயல்படுகிறது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள். அதேபோல் மாநகராட்சியின் முதல்கட்ட பணியான எல்லை விரிவாக்கம் செய்யப்படாததால், முழுமையான அந்தஸ்து கிடைக்காமல் தத்தளிக்கிறது.
கடனில் தத்தளிப்பு
மேலும் மாநகராட்சியில் வருவாயை விட செலவு அதிகமாக இருக்கிறது. சொத்து வரி உயர்த்தப்பட்ட பின்னரும் மாநகராட்சியின் வருவாய் பெரிய அளவில் உயரவில்லை. இதனால் கடனில் இருந்து மீண்டு வரமுடியாமல் திணறுகிறது. முக்கிய அரசு அலுவலகங்கள் அனைத்தும் மாநகராட்சி எல்லைக்கு வெளியே சென்றுவிட்டன. இதனால் தொழில்வரி குறைந்து விட்டது.
அதேபோல் புதிய நிறுவனங்கள், வீடுகள் கட்டுவோரும் மாநகராட்சிக்கு வெளியே சென்று விடுகின்றனர். இதனால் மாநகராட்சிக்கு வருமானம் பெரிய அளவில் உயரும் சாத்தியம் இல்லாத நிலை இருக்கிறது. அதேநேரம் மாநகராட்சிக்கு மிக அருகில் இருக்கும் ஊராட்சிகளில் குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. அங்கு போதிய அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் சுணக்கம் இருக்கிறது.
காலத்தின் கட்டாயம்
எனவே மாநகராட்சி எல்லையின் எல்லையை விரிவாக்கம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். இதன்மூலம் கிராமப்புற மக்களுக்கு மேம்பட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கும். அதேபோல் ஊராட்சிகளை இணைப்பதால் மாநகராட்சியின் எல்லை மட்டுமின்றி வருவாயும் உயரும். இதை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று எல்லை விரிவாக்கம் செய்யப்படுவது எப்போது என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.