தமிழ்நாட்டில் புதிது புதிதாக நோய்கள் பரவுவதற்கான காரணம்? ஐகோர்ட்டு உத்தரவு

தமிழ்நாட்டில் புதிது புதிதாக நோய்கள் பரவுவதற்கான காரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட்டுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-10-14 23:01 GMT

சென்னை,

கோவை அரசு ஆஸ்பத்திரியில் மருந்து கொள்முதல் அதிகாரியாக பணியாற்றியவர் முத்துமாலை ராணி. இவர் அளவுக்கு அதிகமாக மருந்துகளை கொள்முதல் செய்தார். அந்த மருந்துகள் காலாவதியாகிவிட்டதால், அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டது என்று இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முத்துமாலை ராணி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

நகர்ப்புற, கிராமப்புற அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் வழங்கப்படுவதாக பொதுமக்கள் வட்டாரத்தில் பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பொதுமக்கள் சந்தேகம்

மருந்து காலவதியாகிவிடுவதால் அதைச் சாப்பிடும் நோயாளிகளுக்கு எந்தப் பயனையும் தருவது இல்லை. கொரோனா பாதிப்புக்கு பின்னர், குரங்கம்மை, வைரஸ் காய்ச்சல் என்று பல நோய்கள் தமிழ்நாடு முழுவதும் புதிது புதிதாக பரவி வருகின்றன. அதற்கான காரணத்தை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுபோன்ற நோய்கள் திட்டமிட்டு கூட்டாக சேர்ந்து பரப்பப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது. மருந்து நிறுவனங்கள் மீது சமீபகாலங்களில் ஏராளமான புகார்கள் வருகின்றன.

நோய் பரவல்

இந்த மருந்து நிறுவனங்கள் எல்லாம் முறையற்ற வழிகளில் மருந்துகளை பிரபலப்படுத்தி பல ஆயிரம் கோடிகளை சம்பாதிப்பதாக சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டுகூட கருத்து தெரிவித்துள்ளது. எனவே, இந்த மருந்து நிறுவனங்கள் வேண்டுமென்ற நோய்களை பரப்புகின்றனவா இல்லையா என்பதை கண்டறிய வேண்டியதுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தில் உடல் ஆரோக்கியம் என்பது அடிப்படை உரிமையாக கருதப்படுகிறது.

எனவே, அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும், மருந்து கடைகளுக்கும் மருந்து வினியோகம் செய்யும் மருந்து நிறுவனங்களை தமிழ்நாடு அரசு கண்காணிக்கிறதா என்பது தெரியவேண்டும்.

அறிக்கை வேண்டும்

எனவே, தமிழ்நாட்டில் புதிது புதிதாக நோய்கள்பரவுவதற்கான காரணங்களையும், மருந்து நிறுவனங்களின் செயல்களையும் ஆய்வு செய்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த வழக்கு விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்