பற்களை பிடுங்கிய விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையில் கூறி இருப்பது என்ன?-பரபரப்பு தகவல்

அம்பை போலீஸ் உதவி சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ.ஆர்) பரபரப்பு தகவல்கள் கூறப்பட்டு உள்ளது.

Update: 2023-04-20 20:24 GMT

அம்பை போலீஸ் உதவி சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ.ஆர்) பரபரப்பு தகவல்கள் கூறப்பட்டு உள்ளது.

வழக்குப்பதிவு

நெல்லை மாவட்டம் அம்பை, கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது புகார்கள் எழுந்தன. இதுகுறித்து சேரன்மாதேவி உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார். இந்தநிலையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரி அமுதா விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது.

முதல் தகவல் அறிக்கை

பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்.ரகு கடந்த 17-ந்தேதி வழக்குப்பதிவு செய்து உள்ளார்.

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்த இசக்கி என்பவர் மகன் சுபாஷ் (வயது 25) கொடுத்த புகார் அடிப்படையில் இந்த முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அதில் எதிரிகள் பட்டியல் வரிசையில் பல்வீர்சிங் ஏ.எஸ்.பி. மற்றும் சிலர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் உள்ள விவரம் வருமாறு:-

கொடுக்கல் -வாங்கல் தகராறு

நான் (சுபாஷ்) என்னுடைய மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். தூத்துக்குடியில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறேன். நானும் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த லட்சுமிசங்கர், வெங்கடேஷ் ஆகியோர் எனது நண்பர்கள். எங்களுக்கும், தெற்கு பாப்பாங்குளத்தை சேர்ந்த இன்னொரு வெங்கடேஷ் வகையறாவுக்கும் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை ஏற்பட்டு கடந்த 22.3.2023 அன்று மதியம் 3 மணிக்கு கல்லிடைக்குறிச்சி தலைச்சேரியில் வைத்து 2 தரப்புக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதுகுறித்து பாப்பாங்குளம் வெங்கடேஷ் எங்கள் மீது கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்து விட்டார். நாங்கள் 3 பேரும் பயந்து போய் கே.டி.சி.நகரில் இரவு தூங்கினோம். மறுநாள் காலை 8.15 மணிக்கு எங்கள் வீட்டுக்கு போலீசார் 3 பேர் வந்தனர். அவர்கள் எங்கள் 3 பேரையும் தனியாக காரில் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்வதாகவும், விசாரித்து விட்டு விடுவதாகவும் கூறினார்கள். அப்போது கூனியூர் அருகே அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங்கும் ஒரு வாகனத்தில் எங்களுடன் சேர்ந்து முன்னால் சென்றார்.

பற்களை பிடுங்கினார்

காலை 10 மணிக்கு கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையம் சென்றதும், மாடிப்படி அருகில் வைத்து பல்வீர்சிங் நிற்க வைத்தார். பின்னர் போலீசார் அவர் சொன்னபடி போலீஸ் நிலையத்தில் முதல் மாடிக்கு அழைத்து சென்றனர். அங்கு பல்வீர்சிங், சி.ஐ.டி. போலீஸ்காரர் ராஜ்குமார், எழுத்தர் சுடலை, போலீசார் விக்னேஷ், சதாம், பஷீர், இசக்கி மற்றும் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய இன்னொரு காவலர் ஆகியோர் இருந்தனர்.

பல்வீர்சிங், ஒரு பெட்டியை வாங்கி அதற்குள் இருந்த ஒரு கட்டிங் பிளேயரை எடுத்து லட்சுமிசங்கரின் மேல் தாடையில் ஒரு பல்லை பிடுங்கினார். எழுத்தர் சுடலை என்பவர் தரையில் சில பேப்பர்களை விரித்து, ரத்தம் பேப்பரில் சிந்துமாறு பார்த்துக் கொண்டார்.

பின்னர் ஏ.எஸ்.பி. பல்வீர்சிங் என் வாய்க்குள் கட்டிங் பிளேயரை விட்டு, வலது கீழ்தாடையில் ஒரே நேரத்தில் 3 பற்களை பிடுங்கி விட்டார்.

கெஞ்சினார்

மூன்றாவதாக பல்வீர்சிங், பற்களை பிடுங்க வெங்கடேஷை அழைத்தபோது வெங்கடேஷ் தன்னை விட்டு விடுமாறு அவர் காலில் விழுந்து கெஞ்சினார்.

வெங்கடேஷ் வாயை திறக்க மறுத்ததால் எங்களிடம் வந்து, அவன் வாயை திறக்க சொல்லுங்க, இல்லன்னா உங்களுக்கு இன்னும் 3 பல்ல பிடுங்கிருவேன் என்று மிரட்டினார். அதனால் அச்சமடைந்த நாங்கள் வெங்கடேஷை வாயை திறக்க சொல்லி அழுதோம். அவரும் வாயை திறந்ததும், கீழ் தாடையில் அவருக்கு 3 பற்களை பிடுங்கினார்.

உள்நோயாளி

பின்னர் எங்களை பாத்ரூமிற்கு சென்று எங்கள் வாய், முகம் உடலை கழுவ சொல்லிவிட்டு, கீழே சிதறி கிடந்த ரத்தத்தையும் எங்களையே கழுவி விடச் செய்தனர்.

பின்னர் காலை 10.45 மணிக்கு இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி வந்து மாத்திரை கொடுத்தார். கூல்டிரிங் வாங்கி கொடுத்து குடிக்க சொன்னார். அதன்பின்னர் மாலை 4 மணிக்கு எங்கள் 3 பேரையும் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு 52-வது வார்டில் உள்நோயாளியாக சேர்த்தனர். அடுத்த நாள் 24-ந்தேதி காலை 7 மணிக்கு வேறு வார்டுக்கு மாற்றினார்கள். பின்னர் போலீசார் கூறியபடி டாக்டர்களிடம் நாங்களாகவே டிஸ்சார்ஜ் ஆகிக்கொள்கிறோம் என்று சொன்னோம். அதன்படி டிஸ்சார்ஜ் செய்தனர்.

விபத்து போல் போலி ஆவணம்

அதன்பின்னர் இன்ஸ்பெக்டர், சிறப்பு படை போலீஸ்காரர் ஒருவரும் எங்களை அவர்களது ஜீப்பில் அழைத்துக் கொண்டு கல்லிடைக்குறிச்சி நோக்கி சென்றனர்.

கரம்பை என்ற ஊர் அருகே வைத்து எங்களை போலீஸ் வாகனத்தில் இருந்து இறக்கி ஒரு காரில் ஏற்றி டானா-ஆம்பூர் ரோட்டில் சிறிது தூரம் அழைத்து சென்றார்கள். அங்கு சிலர் இருந்தனர். பின்னர் அவர்கள் காரில் எங்கள் 3 பேரையும் ஏற்றிக்கொண்டு, எங்களை ஏற்கனவே அழைத்து வந்த காரில் எங்களது வீட்டாரை ஏற்றி அவர்கள் அனுப்பி வைத்தனர். பின்னர் எங்களை பாபநாசம் லாட்ஜில் தங்க வைத்தனர். எங்களுடன் 2 வக்கீல்கள் தங்கிக்கொண்டனர். பின்னர் அங்குள்ள ஒரு மண்டபத்துக்கு அழைத்து சென்று, நாங்கள் வாகனத்தில் இருந்து கீழே விழுந்தது போல் சில ஆவணங்களை தயாரித்து எங்களிடமும், எங்களது வீட்டாரிடமும் கையெழுத்து வாங்கிக்கொண்டனர். .

பின்னர் 25-ந்தேதி அதிகாலையில் எங்களை வீட்டாருடன் அனுப்பி வைத்தனர்.

பணம் கொடுத்தனர்

அன்று மதியம் 1 மணிக்கு மணிமுத்தாறு கேம்ப் போலீஸ் கேண்டீன் அருகில் வைத்திய செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி எங்கள் மூவருக்கும் போலீசார் தலா ரூ.30 ஆயிரம் கொடுத்தனர்.

பின்னர் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், வெளியே சொன்னால் உறுதியாக குண்டர் சட்டம் போட்டு விடுவோம் என்றும் மிரட்டி அனுப்பினர். நானும் ஓரிரு நாட்கள் அவர்களுக்கு பயந்து போய் அமைதியாக இருந்தேன். தற்போது என்னை போல் பாதிக்கப்பட்ட பலரும் துணிந்து புகார் அளிக்க முன் வருவதால் நானும் துணிந்து புகார் அளிக்க முன்வந்தேன்.

இவ்வாறு அதில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்