குவாரிகளுக்கு அனுமதி வழங்கும்போது விதிக்கும் கட்டுப்பாடுகள் என்னென்ன?

குவாரிகளுக்கு அனுமதி வழங்கும்போது விதிக்கும் கட்டுப்பாடுகள் என்னென்ன? என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.;

Update:2023-05-03 02:22 IST

குவாரிகளுக்கு அனுமதி வழங்கும்போது விதிக்கும் கட்டுப்பாடுகள் என்னென்ன? என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

பாம்பாற்றில் மணல் குவாரி

ராமநாதபுரம் மாவட்டம் உப்புக்கோட்டையை சேர்ந்த சமாதானம் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எங்கள் பகுதியில் உள்ள பாம்பாற்று படுகையில் மணல் எடுக்க தனியாருக்கு அனுமதி வழங்கி கடந்த ஆண்டு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அந்த குவாரியில் அனுமதியை மீறி அதிக அளவில் மணல் எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது இரவும், பகலும் எந்திரங்கள் மூலமாக மணல் எடுக்கப்பட்டு லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் இந்த பகுதியில் விவசாயமும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது.

எனவே குவாரியின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை.

திருவாடனை தாலுகா, பாம்பாற்றுப்பகுதியில் மணல் எடுப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். உடனடியாக குவாரியின் செயல்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும். குவாரி விதிமீறலுக்கு காரணமாக அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

கட்டுப்பாடுகள் என்னென்ன?

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், தனியார் குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும்போது என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன? என்று கேள்வி எழுப்பினர்.

பின்னர் இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஜூன் மாதம் 6-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்