4 ஆயிரத்து 675 பயனாளிகளுக்கு ரூ.34½ கோடியில் நலத்திட்ட உதவிகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 675 பயனாளிகளுக்கு ரூ.34½ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் வழங்கினார்.

Update: 2023-06-21 19:00 GMT

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 675 பயனாளிகளுக்கு ரூ.34½ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் வழங்கினார்.

ஆய்வுக்கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு துறைகள் குறித்து விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக அனைத்துத் துறைகள் சார்பில் 4 ஆயிரத்து 675 பயனாளிகளுக்கு ரூ.34 கோடியே 66 லட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் வாக்குறுதி

தமிழக முதல்-அமைச்சர் தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். இந்தியாவிலேயே ஒரு முன் மாதிரி மாநிலமாக மற்ற மாநிலங்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக தமிழகத்தைமுதல்- அமைச்சர் உருவாக்கி வருகிறாா். பெண்களுக்கான திட்டம், பெண்கள் உரிமைத் தொகை செப்டம்பர் மாதம் முதல் நிறைவேற்றப்பட இருக்கிறது. தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி, பெண்களுக்கு இலவச பஸ் பயணத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நலத்திட்ட உதவிகள்

இது உங்களுக்கான அரசு. தொடர்ந்து, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவோம், நீங்கள் இந்த அரசுக்கு உங்களுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தொடர்ந்து தரவேண்டும். இந்த விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 4ஆயிரத்து675 பயனாளிகளுக்கு ரூ.34 கோடியே 65 லட்சத்து 72 ஆயிரத்து 724 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் ராமலிங்கம் எம்.பி., எம்.எல். ஏ.க்கள் நிவேதாமுருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, பொதுப்பணித்துறை காவிரி வடிவ நிலக்கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தயாளவினாயஅமல்ராஜ், ஒன்றியக்குழு தலைவி காமாட்சி மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா். 

Tags:    

மேலும் செய்திகள்