தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை
கோத்தகிரி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
கோத்தகிரி பேரூராட்சியில் 50-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ரஞ்சித், தூய்மை பணியில் ஈடுபடும் போது அணிய வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். மேலும் தாங்கள் ஈட்டும் வருமானத்தில் மீதமாகும் தொகையை எதிர்காலத்திற்கு சேமித்து வைக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் சேமிப்புக் கணக்கை தொடங்குவது குறித்து விளக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு அரசின் தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தின் அடையாள அட்டைகள் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.